தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கவுன்சிலிங் : அமைச்சர் சுப்ரமணியன்
ஈரோடு திண்டலில் இன்று நடந்த தடுப்பூசி முகாமினை மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன், தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஈரோடு திண்டலில் இன்று நடந்த தடுப்பூசி முகாமினை மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் நடந்த நிருபர்கள் சந்திப்பில் அமைச்சர் சுப்பிரமணியன் மேலும் கூறியதாவது:
தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி, இரண்டாவது மிகப்பெரிய தடுப்பூசி முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக முதலாவது தடுப்பூசி முகாமில் 20 லட்சம் இலக்கிற்கு பதிலாக, 28 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். முதல்வர் எப்போதெல்லாம் தடுப்பூசி கையிருப்பு அதிகமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.
அந்த வகையில் 16 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. இதையடுத்து சிறப்பு முகாம் இன்று அமைக்கப்பட்டு போடப்பட்டு வருகிறது. 20 ஆயிரம் இடங்களில் இந்த முகாம்கள் நடைபெற்று வருகிறது. 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடவேண்டும் என்ற இலக்கோடு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 56 சதவீதமாக உள்ளது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18 லட்சத்து 97 ஆயிரத்து 312 பேர் உள்ளனர்.அதில் இதுவரை 14 லட்சத்து 606 பேர். அதாவது 59 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டு உள்ளனர். இரண்டாம் தவணைத் தடுப்பூசியை பொறுத்தவரை 2 லட்சத்து 88 ஆயிரத்து 64 பேர் செலுத்தியுள்ளனர். இது 15 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த முறை ஈரோடு மாவட்டத்தில் 847 மையங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது.
இந்த முறை தடுப்பூசி எண்ணிக்கை குறைவாக இருப்பதால் 538 இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. ஈரோட்டில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் எண்ணிக்கை 36 சதவீதமாக இருந்தது. தற்போது ஒரே மாதத்தில் 59 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று இந்த மாவட்டத்திற்கான இலக்கு 43 ஆயிரம். மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள்.
நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது வருத்தமாக உள்ளது. தமிழக முதலமைச்சர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதே கடந்த காலங்களில் 14 மாணவர்கள் மரணமடைந்த நிலையில் அவர்களுக்கு விடுத்த வேண்டுகோளில் மரணம் இதற்கு தீர்வு அல்ல.இதைத்தாண்டி வாழ்க்கை இருக்கிறது. உங்களை பெற்று வளர்த்த பெற்றோருக்கு நீங்கள் செய்கிற கைமாறு இதுவாக இருக்க முடியாது என்று கூறியுள்ளார் முதல்வர்.
இது ஒரு சாதாரண நிகழ்வு இதிலிருந்து மீண்டு வர வேண்டும். இப்போதும் கூட நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் முயற்சிகளை இந்த அரசு மேற்கொண்டு வருவதை மாணவ மாணவிகள் அறிவார்கள் பெற்றோரும் அறிவார்கள். இது தொடர்பாக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் பணியும் நடைபெற்று கொண்டிருக்கிறது. மாணவர்கள் அவசரப்பட்டு தற்கொலை முடிவை மேற்கொள்ள கூடாது என நாங்கள் வேண்டுகோளாக வைக்கிறோம்.
முதல்வர் உத்தரவுப்படி மாணவர்களுக்கு கவுன்சிலிங் மன அழுத்தத்தை போக்கும் வகையில் தொலைபேசியில் நேரடியாக மாநில ஆலோசகர்கள், மனநல மருத்துவர்கள் 333 பேரை கொண்டு அவர்களிடம் பேசும் பணியை தொடங்கி இருக்கிறோம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. தினந்தோறும் 10,000 எண்ணிக்கையில் பேசிக் கொண்டிருக்கிறோம். நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 973. அதில் தினம் தோறும் இரண்டாயிரம் மூவாயிரம் என்ற எண்ணிக்கையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 5,000 பேரிடம் பேச வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 24 ஆயிரத்து 100 பேருக்கு கவுன்சிலிங் முடிந்துள்ளது. ஒரு சில இடங்களில் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் அழுத்தம் தருகிறார்கள் அவர்களுக்கும் கவுன்சிலிங் வழங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த முறை நீ மருத்துவராகிய தீரவேண்டும் என்கிற அழுத்தத்தை ஒரு சில பெற்றோர்கள் மாணவர்களுக்கு தருகிறார்கள். இதனால் கூட அந்த குழந்தைகள் மனமுடைந்து போகிறார்கள். நிச்சயம் அந்த நிலை வராது என்றே கருதுகிறோம். தமிழக அரசு பொறுத்தவரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை முடித்து மாணவர் சேர்க்கையை ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவ கல்லூரிகள் கட்டும் பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு மருத்துவ கல்லூரிகளிலும் 150 மாணவர்கள் இந்த அடிப்படையில் 1650 மாணவர்கள் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக மருத்துவ துறையோடு ஒட்டுமொத்த தொழிற்கல்வி படிக்கும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் என்கிற அந்தத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
நாளை காலை 11 மணிக்கு தொழிற்கல்வி படிக்கின்ற மாணவர்களுக்கான அந்த ஆணைகளை வழங்கி முதல்வர் தொடங்கி வைப்பார். பொதுமக்கள் கவசம் அணிந்து கொள்ள வேண்டும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தேவையில்லாமல் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். இதுபோன்று கடைப்பிடித்தால் நாம் மூன்றாவது அலையிலிருந்து நம்மை பாதுகாக்க முடியும் என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். இந்நிகழச்சியின்போது கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உள்பட பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu