ஈரோடு: 70% பேருந்துகள் இயக்கம்

ஈரோடு: 70% பேருந்துகள் இயக்கம்
X
போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வரும் வேளையில் ஈரோடு மாவட்டத்தில் 70 சதவீத பஸ்கள் வழக்கம் போல் இயங்கியது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 9 போக்குவரத்துக்கழக சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து இருந்தன. இதனால் இன்று முதல் பஸ்கள் முழுமையாக இயக்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் இன்றைய தினம் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்படும். பணிக்கு வராத ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன.

ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை ஈரோடு காசிபாளையம், அந்தியூர், நம்பியூர், பெருந்துறை, சத்தியமங்கலம், தாளவாடி, பவானி உட்பட 13 பணிமனைகளில் தினமும் 720 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 60 சதவீதம் வெளி மாவட்டங்களுக்கும், 40 சதவீதம் உள் மாவட்டத்திற்குள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் அண்ணா தொழிற்சங்கத்தினர், மற்றும் தற்காலிக ஊழியர்களை கொண்டு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் 70 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. அதேநேரத்தில் தனியார் பஸ்கள் முழுமையாக இயக்கப்பட்டன. இதனால் பெருமளவு பயணிகள் பாதிப்பு இன்றி சென்றனர்.

இது குறித்து ஈரோடு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, தொழிற் சங்கத்தினர் இன்று வேலை நிறுத்த போராட்டம் அறிவித்த உடனேயே அதற்கான மாற்று ஏற்பாடுகளை நாங்கள் செய்ய தொடங்கி விட்டோம். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 13 பணிமனைகளில் 720 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அண்ணா தொழிற்சங்கத்தினர் மற்றும் தற்காலிக ஊழியர்கள் மூலம் இன்று பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை நேரங்களில் மட்டும் 600 பஸ்கள் தினமும் இயக்கப்பட்டு வந்தது இன்று 500 -க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்றனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!