ஈரோடு கோவிலில் 3வது முறையாக பணம் திருட்டு

ஈரோடு கோவிலில் 3வது முறையாக பணம் திருட்டு
X

ஈரோடு மணல்மேட்டில் உள்ள பாலமுருகன் கோவிலில் 3வது முறையாக பணம் திருடப்பட்டுள்ளது.

ஈரோடு மணல்மேட்டில் பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மக்கள் தினமும் வழிபட்டு வருவது வழக்கம். கோயிலின் முன்புள்ள வளாகத்தில் உண்டியல் வைக்கப்பட்டு உள்ளது. இந்த உண்டியல் வருடத்துக்கு ஒருமுறை திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படுவது வழக்கம்.இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் பூசாரி பூஜையை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார். இன்று காலை மீண்டும் பூஜைக்காக வந்த பூசாரி கோவில் முன்பகுதியில் உள்ள கிரில்கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது கோவில் வளாகத்தில் இருந்த உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் நள்ளிரவில் வந்த மர்ம நபர் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை திருடியது தெரிய வந்தது. அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் கோவில் கேட் பூட்டை உடைத்து உண்டியல் பூட்டையும் உடைத்து பணம் திருடியது பதிவாகியுள்ளது.

3,000 ரூபாய் வரை பணம் திருடு போயிருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் எவ்வளவு பணம் திருடு போயுள்ளது என உறுதியான தகவல் தெரியவில்லை. ஏற்கனவே இந்த கோவிலில் இரண்டு முறை உண்டியல் பணம் திருட்டு போயுள்ளது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது முறையாக தற்போது பணம் திருடு போயுள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அப்பகுதி மக்கள் கோவில் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!