ஈரோடு மாநகராட்சி பகுதியில் 40 வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிவரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அதோபோல் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்தது. பின்னர் இரவு 7 மணி முதல் 12 மணி வரை தொடர்ந்து இடி மின்னல் கூடிய கனத்த மழை பெய்தது. குறிப்பாக மாநகராட்சி பகுதியில் நேற்று இரவு 8 மணி முதல் 12 மணி வரை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் மாநகராட்சியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது.
இந்நிலையில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்டோனி பிரிட்ஜ் அருகே உள்ள அசோகபுரி பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடிசைகள் குடியிருப்புகள் உள்ள இப்பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ளநீர் புகுந்தது.
இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள 4-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் சேதமடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாசில்தார் உளிட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ய நடவடிக்கை எடுத்தனர். அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் அருகே உள்ள ஆதிதிராவிடர் அரசினர் மாணவர் தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இன்று காலை உணவு வழங்கப்பட்டது. தற்போது அந்த பகுதியில் மழை தண்ணீர் வடிந்து வருகிறது. இருப்பினும் சேறும் சகதியும் சூழ்ந்திருப்பதால் மாநகராட்சி பணியாளர்கள் அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் பழைய பூந்துறை ரோடு பகுதியில் 10 -க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்ததால் அவர்களும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. பழைய பூந்துறை ரோடு பகுதியில் வீடுகளில் புகுந்த தண்ணீர் வடிய தொடங்கியது மக்கள் மீண்டும் வீட்டுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu