ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி: 29 வேட்பாளர்களின் டெபாசிட் காலி

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி: 29 வேட்பாளர்களின் டெபாசிட் காலி
X

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் திமுக வேட்பாளர் பிரகாஷ் வெற்றி.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட 31 வேட்பாளர்களில், திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் தவிர்த்து மற்றவர்களின் டெபாசிட் காலியானது.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட 31 வேட்பாளர்களில், திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் தவிர்த்து மற்றவர்களின் டெபாசிட் காலியானது.

ஈரோடு நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் இருந்தனர். தேர்தலின் போது 10 லட்சத்து 94 ஆயிரத்து 366 வாக்குகள் பதிவானது. இது 70.59 சதவீதமாகும்.

தேர்தலில் திமுக வேட்பாளராக கே.இ.பிரகாஷ், அதிமுக வேட்பாளராக ஆற்றல் அசோக்குமார், பாரதிய ஜனதா கட்சி கூட்டணி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜயகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் கார்மேகன், இன்னும் சில அரசியல் கட்சிகளை வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் என 31 பேர் போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணிக்கை நேற்று (ஜூன்.4) காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எண்ணப்பட்டன. முதல் சுற்றில் இருந்தே திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் முன்னிலை வகிக்க தொடங்கினார். ஒவ்வொரு சுற்று முடிவிலும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் முன்னிலையில் இருந்தார்.

23 சுற்றுகள் முடிவில் கே.பிரகாஷ் 5 லட்சத்து 62 ஆயிரத்து 339 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 3 லட்சத்து 25 ஆயிரத்து 773 வாக்குகள் பெற்றார். இதனால் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் 2 லட்சத்து 36 ஆயிரத்து 566 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தமாகா வேட்பாளர் விஜயகுமார் 77 ஆயிரத்து 91 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகன் 82 ஆயிரத்து 796 வாக்குகள் பெற்றார்.

திமுக, அதிமுக வேட்பாளரை தவிர மற்ற வேட்பாளர்கள் 29 பேரும் டெபாசிட் இழந்தனர். அதாவது வாக்கு எண்ணிக்கையின் போது மொத்தம் பதிவான வாக்குகளில் 6ல் 1 பங்கு பெற்றவர்களுக்கு டெபாசிட் தொகை திரும்ப வழங்கப்படும். ஆனால் நடந்து முடிந்த ஈரோடு பாராளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவேட்பாளர்களை தவிர மற்ற யாரும் ஒரு லட்சம் ஓட்டுகள் வாங்காததால் அவர்கள் அனைவரும் டெபாசிட்டை இழந்தனர்.

சுயேச்சை வேட்பாளர்கள் 20 பேர் போட்டியிட்டனர். இவர்கள் வாங்கிய ஓட்டுகளை விட நோட்டா கூடுதல் வாக்குகள் பெற்றன. அதாவது நோட்டா 13 ஆயிரத்து 983 வாக்குகள் பெற்றுள்ளன. மற்ற சுயேச்சை வேட்பாளர்கள், சில அரசியல் கட்சி வேட்பாளர்கள் இதைவிட குறைவான வாக்குகள் பெற்றுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!