தொடர் மழையால் நிரம்பிய பவானி மயிலம்பாடி ஏரி
Erode news, Erode news today - மயிலம்பாடி ஏரி.
Erode News Tamil - ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சி ஒன்றியம், மயிலம்பாடி ஊராட்சி, கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 14 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. மேட்டுப்பாங்கான பகுதியில் இந்த ஏரி உள்ளதால், இந்த ஏரிக்கு மழைக் காலங்களிலும் நீர்வரத்து குறைந்து காணப்படும். இதனால், சிறப்பு திட்டத்தின் கீழ் ஏரியில் நீர்மட்டத்தை உயர்த்த இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேட்டூர் மேற்கு கரை பாசன வாய்க்காலின் கசிவுநீர் குட்டை உள்ள கல்வாநாயக்கனூரிலிருந்து தண்ணீர் மின் மோட்டார் மூலம் நீரேற்றம் செய்யப்பட்டு குழாய் மூலம் ஏரியில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால், உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சம் நிதியில் குழாய்கள் பதித்து, 20 ஹெச்பி மோட்டர் பொருத்தப்பட்டு உபரிநீர் சேகரிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
மேட்டூர் அணையிலிருந்து வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும்போது கசிவுநீர் குட்டையிலிருந்து நாள்தோறும் தண்ணீர் இறைக்கப்பட்டது.ஆனால், வறண்டே கிடந்த ஏரிக்கு நீர் வந்தாலும் முழு கொள்ளளவை எட்டுவதில்லை.மானாவாரி நிலங்கள் அதிகம் கொண்ட இந்த ஊராட்சியில் 36 கிராமங்களும், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வரும் நிலையில் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும். இவர்களின் விவசாயமும் கேள்விக்குறியாகவே இருக்கும். இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து செய்த கனமழையால் இந்த ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால், முழு கொள்ளளவை எட்டிய ஏரி நிறைந்து உபரி நீர் வடக்கு பகுதியில் உள்ள நீர் போக்கி வழியாக வெளியேறத் தொடங்கியது.
இந்த ஏரிக்கு மீன்பிடி உரிமம் ஏலம் விடப்பட்டு ஏலதாரர்கள் கட்லா, ரோகு, ஜிலேபி உள்ளிட்ட பல ரக மீன்களை வளர்த்து வந்தனர். ஏரிக்கு வந்த உபரிநீர் பெருக்கெடுத்து வெளியேறியதால் இங்கு வளர்க்கப்பட்டு வந்த மீன்களும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. மேலும், ஏரிக்கு நீர்வரும் பாதையில் மீன்கள் எதிர்த்து புகுந்தது. ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு குட்டைக்கும் மீன்கள் அதிக அளவில் சென்று விட்டது.
நீர் வெளியேறி செல்லும் பாதைகளில் கரும்புக்காடு மற்றும் விவசாய தோட்டங்களில் மீன்கள் புகுந்தது. பொதுமக்கள் காடுகளுக்குள் தண்ணீரில் இருந்த மீன்களை ஆர்வத்துடன் போட்டி போட்டு பிடித்து சென்றனர். மீன்கள் வளர்ந்து மீன்பிடிக்காலம் தொடங்கும் நேரத்தில் அடித்துச் செல்லப்பட்டது வருத்தமளிக்கிறது . ஏரி நிறைந்தது ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும், மீன்கள் அடித்துச் செல்லப்பட்டது இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஒப்பந்ததாரர்கள் வேதனை தெரிவித்தனர்.தற்போது, ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் கிருஷ்ணாபுரம், ஆலக்காட்டுபுதூர் வழியாக கல்வாநாயக்கனூர் கசிவுநீர் குட்டைக்கு சென்று அங்கிருந்து சங்கரகவுண்டன்பாளையம் ஏரிக்கு செல்கிறது. ஏரி மீன்கள், கரும்புக்காடு மற்றும் விவசாய தோட்டங்களில் கிடைப்பதால், சிலர் வீடுகளுக்கு பிடித்து செல்கின்றனர். அதிகமான மீன்கள் கிடைத்தால், சிலர் அதை குறைந்த விலைக்கு விற்கவும் செய்கின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu