ஈரோடு: கடம்பூர் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 5க்கும் மேற்பட்ட மாடுகள்
ஈரோடு மாவட்டம், கடம்பூர் அருகேயுள்ள மாக்கம்பாளையம் மலைப்பகுதியில் கோம்பையூர் மற்றும் கோம்பை தொட்டி ஆகிய கிராமங்கள் உள்ளது, இங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக அதிக அளவில் மாடுகளை வளர்த்து அதன் மூலம் வருவாய் ஈட்டுவதையே முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். இந்த கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியின் அருகாமையில் உள்ளதால் இங்குள்ள மக்கள் தங்களின் வளர்ப்பு மாடுகளை மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு ஓட்டிச்செல்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இங்குள்ள வனப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் மாடு மேய்ப்பவர்கள் மாடுகளுடன் செல்ல முடியாமல் தன்னிச்சையாக மாடுகளை வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்து விடுகின்றனர். இவ்வாறு காலையில் மேய்ச்சலுக்கு அனுப்பிய மாடுகள் அனைத்தும் மாலையில் தானாக தங்களின் இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்து விடும் பழக்கத்தை கொண்டுள்ளது.
இந்நிலையில் கடத்த சில தினங்களாக இந்த பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் மேய்ச்சலுக்காக அனுப்பும் மாடுகள் பாலத்தை கடக்கும் போது திடீரென பெருகி வரும் காட்டாற்று வெள்ளத்தில் மாட்டிக்கொள்ளும் எனக்கருதி, இங்குள்ள சிலர் வனப்பகுதிக்கு சென்று அங்கிருந்த மாடுகளை வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர்.
அப்போது கோம்பையூர் பகுதியை சேர்ந்தவர்கள் கோம்பையூர் பள்ளத்தின் தரைப்பாலம் வழியே மாடுகளை அழைத்து வரும்போது திடீரென வனப்பகுதியிலிருந்து அதிகப்படியான வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் 5-க்கும் மேற்பட்ட மாடுகளை வெள்ளநீர் அடித்து சென்றது.இவ்வாறு வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்ட மாடுகள் செய்வதறியாது மேலே வருவதற்கு தத்தளித்த காட்சி கண்கலங்க வைத்தது.
மாட்டின் உரிமையாளர்கள் காப்பாற்ற வழி இல்லாத நிலையில் மாடுகளே வெள்ள நீரிலிருந்து நீந்தி ஒரு கட்டத்தில் கரை சேர்ந்து விடும் என்ற நம்பிக்கையில் பள்ளத்தின் கரையோரத்திலேயே மாட்டின் உரிமையாளர்கள் காத்துக்கிடப்பதாக அங்கிருந்த மக்கள் சோகத்துடன் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu