ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உழவர் சந்தை செயல்பட தொடங்கியது

ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உழவர் சந்தை செயல்பட தொடங்கியது

ஈரோடு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட தொடங்கியுள்ள உழவர்சந்தை.

ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று முதல் உழவர் சந்தை செயல்படத் தொடங்கியது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உழவர் சந்தையில் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். மற்ற இடங்களை விட இங்கு காய்கறி விலை குறைவாக இருப்பதால் மக்கள் கூட்டம் எப்போதும் இருக்கும்.

இந்நிலையில் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்கு மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


அதன்படி கடந்த மாதம் 12 -ம் தேதி ஈரோடு சம்பத் நகரில் செயல்பட்டு வந்த உழவர் சந்தை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒரு பகுதி குமலன்குட்டையில் உள்ள மாநகராட்சி ஆரம்பபள்ளி வளாகத்திலும், மற்றொரு பகுதி பெரியார் நகர் பகுதியிலும், மூன்றாவது பகுதி சம்பத் நகரில் உள்ள உழவர் சந்தை பகுதிகளில் செயல்பட்டு வந்தது.

இருப்பினும் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. இதனால் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் சம்பத் நகரில் இயங்கி வந்த உழவர் சந்தை ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திற்கு மாற்றப்பட்டு இன்று முதல் செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக பள்ளி வளாகத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டங்கள் போடப்பட்டன. காய்கறி கடைகள் அமைப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் நேற்று நடந்தது. இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை விவசாயிகள் கடை போடுவதற்காக பள்ளி வளாகத்திற்கு வந்தனர். முதல் நாளான இன்று 44 காய்கறி கடைகள் போடப்பட்டிருந்தன. காய்கறி வாங்க வந்த பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

அதன்படி நுழைவாயிலில் பொதுமக்களுக்கு சனிடைசர்கள் வழங்கப்பட்டன. முக கவசம் அணியாமல் வந்த மக்களுக்கு உள்ளே அனுமதி இல்லை. தெர்மல் ஸ்கேனர் மூலம் பொது மக்களின் உடல் வெப்பநிலை சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனைகளுக்கு பிறகே பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். காலை 6 மணி முதல் 9 மணி வரை காய்கறி வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் காலை முதலே அதிகளவில் வந்து காய்கறிகளை வாங்கிச் சென்றனர். அதே நேரத்தில் குமலன்குட்டை, பெரியார் நகரில் செயல்பட்டு வந்த உழவர் சந்தை மறுஅறிவிப்பு வரும் வரை செயல்படாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story