தரமானதாக சாலைகள் மேம்படுத்தப்படும் : காங். வேட்பாளர்
ஈரோடு, கருங்கல்பாளையம், குயிலான்தோப்பு, கந்தசாமி வீதி, செங்கோட்டையன் நகர், ராஜகணபதி நகர், கல்யாணசுந்தரம் நகர் உட்பட பல்வேறு பகுதியில், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இ.திருமகன் ஈவெரா, கை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார்.
அப்பகுதி வாக்காளர்களிடம், வேட்பாளர் திருமகன் ஈரெவா பேசியதாவது:
ஈரோடு கிழக்கு தொகுதியில், பாதாள சாக்கடை, ஊராட்சிகோட்டை குடிநீர் போன்ற திட்டப்பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகிறது. குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து தார் சாலை அமைக்கப்படவில்லை. விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, காங்கிரஸ் பங்கேற்புடன் தி.மு.க., ஆட்சி அமைந்ததும் இப்பகுதியில் முழுமையாக தார் சாலை அமைத்து தரப்படும்.
அனைத்து பகுதியிலும் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மாநகராட்சி பகுதியில் முடிக்கப்படாமல் உள்ள பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததுபோல, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தி, ஐந்து ரூபாய் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஈரோடு வ.உ.சி., விளையாட்டு திடலில் சிந்தடிக் ஓடுதளம் அமைப்பதாக அ.தி.மு.க., அரசு அறிவித்து, கிடப்பில் போட்டுள்ளது. விரைவில் அதனை செயல்படுத்துவோம். வ.உ.சி., விளையாட்டு விடுதியை மேம்படுத்தி, விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தங்குவதற்கான வசதியை மேலும் அதிகரித்து, விளையாட்டு திறனுடைய குழந்தைகளை ஊக்கப்படுத்துவோம்.
கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பஸ் போக்குவரத்து இல்லாத இடங்களுக்கு அரசு பஸ் மற்றும் மினிபஸ்கள் செல்லவும், புதிய வழித்தடமும் ஏற்படுத்தப்படும்.தமிழகத்தில் இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்ற, எனக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu