முகக்கவசம் அணியாமல் வந்த வியாபாரிகள் , பொதுமக்களுக்கு அபராதம்
கொரோனா தாக்கம் காரணமாக கடந்த ஆண்டு நேதாஜி பெரிய மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டு ஈரோடு வ.உ.சி பூங்கா பகுதியில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறிக் கடைகளும், 50-க்கும் மேற்பட்ட பழக்கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இரவு நேரங்களில் மொத்த வியாபாரமும், காலை நேரங்களில் சில்லறை வியாபாரம் நடைபெறுகிறது. சமூக இடைவெளியை கடைப்பிடித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா வேகமெடுத்து உள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வபோது மாநகராட்சி சார்பில் அதிகாரிகள் மார்க்கெட் பகுதியில் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள். மக்கள் ஒரே நேரத்தில் அதிக அளவு கூடுவதால் இங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நேற்று மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் அபராதம் விதித்தனர்.
அதைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் வீரப்பன்சத்திரம் போலீசார் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து முக கவசம் அணியாமல் வந்த வியாபாரிகள் பொதுமக்களுக்கு அபராதம் விதித்தனர். சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் மார்க்கெட்டின் நுழைவு பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டு ஒருவர் பின் ஒருவராக உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் பொதுமக்கள், வியாபாரிகளின் உடல் வெப்பநிலையை தெரிந்து கொள்ளும் வகையில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் கையில் சனிடைசர் தெளிக்கப்பட்டு உள்ளே அனுமதித்தனர். மார்க்கெட் வெளியே சில வியாபாரிகள் கடை போட்டு இருந்தனர். அந்த வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. துப்புரவு ஆய்வாளர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu