மேம்பாலம், ஜவுளி வளாகம், ஏற்படுத்தப்படும்: யுவராஜா

மேம்பாலம், ஜவுளி வளாகம், ஏற்படுத்தப்படும்: யுவராஜா
X
மேம்பாலம், ஜவுளி வளாகம், தரமான சாலை ஏற்படுத்தப்படும் என ஈரோடு கிழக்கு வேட்பாளர் யுவராஜா பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்தார்.

சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.க வை சேர்ந்த வேட்பாளர் எம்.யுவராஜா அதிமுக வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இவர் இன்று தமாக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து ஈரோடு, அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே பொதுமக்கள், பஸ் பயணிகளிடம் ஓட்டு சேகரித்தார். அங்கு, வேட்பாளர் எம்.யுவராஜா பேசியதாவது:

அ.தி.மு.க.,வுடன் பா.ஜ., – பா.ம.க, – த.மா.கா., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் கூட்டணி சார்பில், இரட்டை இலை சின்னத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறேன். இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்தால், இப்பகுதி மக்களுக்கான சேவையை தொடர்வேன்.

ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டம் மூலம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு விரைவாக வழங்கி, குடிநீர் தட்டுப்பாடு இல்லாத தொகுதியாக மாற்றுவேன். பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டப்பணிக்காக தோண்டப்பட்ட சாலைகள் அனைத்தும் புதுப்பிக்கப்படும்.

அத்துடன் சாலைகள் இனி தோண்டப்படாத வகையில், மாற்று திட்டங்கள் செயல்படுத்தப்படும். ஈரோடு கிழக்கு தொகுதிக்குள், அரசின் ஒருங்கிணைந்த மஞ்சள் வணிக வளாகம் கொண்டு வரப்படும். அனைத்து வீதிகளிலும் இரவை பகலாக்கும் வகையிலான தெருவிளக்குகள் அமைக்கப்படும்.

ஜவுளி வர்த்தகத்துக்கு முக்கியத்துவம் தரும்படி, ஜவுளி வணிக வளாகம் அமைக்கப்படும். ஜவுளி சார்ந்த தொழில்கள் அழிந்துவிடாமல் காக்க, பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அந்தந்த தொழிற்சாலைகளுக்கு தகுந்தார்போல உருவாக்கப்படும்.

காளிங்கராயன் வாய்க்காலில் கழிவு கலக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். . ஈரோடு மாநகரின் அனைத்து பகுதியை இணைக்கும் வகையில் சர்குலர் சாலை வசதி ஏற்படுத்தப்படும். அடிக்கடி விபத்துகள் ஏற்படும் பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள், தேவையான இடங்களில் மேம்பாலம், ரவுண்டானா ஏற்படுத்தப்படும்.இவ்வாறு பேசினார்.

ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., தென்னரசு, த.மா.கா., பொதுச் செயலாளர் விடியல் சேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகர், ஆறுமுகம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!