ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க முடிவு
ஈரோடு மாவட்டத்தில், கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தினசரி பாதிப்பில் ஈரோடு மாவட்டம் 2-ம் இடம் பிடித்துள்ளது. முதலில், மாநகர் பகுதியில் தொற்று வேகமாக பரவி, 700-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். பின்னர் மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக, தொற்று கொஞ்சம் குறைந்து பாதிப்பு எண்ணிக்கை 350-க்கும் மேற்பட்டவர்கள் என்றளவில் உள்ளது.
தற்போது 45 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அங்கு தடுப்புகள் அமைத்து, மாநகராட்சி அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தனிமையில் இருக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் மாநகராட்சி சார்பில் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநகர் பகுதியில் முதலில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் தொற்றின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக 2 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது.
ஈரோடு மாநகராட்சி பொறுத்தவரை ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரியில் முதலில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. தற்போது, 10 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது. மேலும் வீடு வீடாக சென்று சளி காய்ச்சல் உள்ளதா நேரிடையாக வீடுக்கு அருகே சென்று கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது: மாநகராட்சி பகுதியில் தற்போது 3,000 பேருக்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதை, தினமும் 4000 பரிசோதனையாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் 3 ஆயிரம் பரிசோதனையை கூடுதலாக ஆயிரம் பரிசோதனை அதிகரித்து பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால், அவருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இனிமேல் குடும்பத்தில் ஒருவருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தால், குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு காம்பவுண்டில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அந்த காம்பவுண்டில் வசிக்கும் அனைவருக்கும் இனி பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu