பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டால் கடும் நடவடிக்கை

பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டால் கடும் நடவடிக்கை
X

எஸ்பி அலுவலகம் (பைல் படம்).

விநாயகர் சதுர்த்தி விழாயொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி சசிமோகன் எச்சரிக்கை.

நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று இந்து முன்னணி சார்பில் ஈரோடு மாநகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபட்டு பின்னர் சிலைகள் ஊர்வலமாக சென்று நீர் நிலைகளில் கரைக்கப்படும். 2 அடி முதல் 12 அடி வரை பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்வார்கள். இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

குறிப்பாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து நீர் நிலைகளில் கரைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக வீடுகளில் சிறிய விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடையை மீறி பொது இடங்களில் சிலைகள் வைத்து வழி படுவோம் என ஒரு சில அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் இதுதொடர்பாக ஏற்கனவே கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. இதில் கடந்த வருடம் பொது இடங்களில் யாரெல்லாம் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டார்களோ அவர்களிடம் போலீசார் தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து விளக்கி கூறியுள்ளனர். மேலும் கடந்த வருடம் விநாயகர் சிலை வைக்கப்பட்ட இடங்கள் குறித்த பட்டியலை போலீசார் தயார் செய்து உள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் கூறியதாவது:

இந்த வருடம் விநாயக சதுர்த்தி விழாவை கொண்டாட அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. குறிப்பாக பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபடக்கூடாது. சிலைகளை ஊர்வலமாக சென்று நீர்நிலைகளில் கரைக்க கூடாது. வீடுகளில் பொதுமக்கள் சிலைகள் வைத்து வழிபடலாம் என அரசு வலியுறுத்தியுள்ளது. நாளை பொது இடங்களில் எங்கேயாவது விநாயகர் சிலைகள் வைக்க படுகிறதா என்பது குறித்து போலீசார் கண்காணிப்பார்கள். அரசு உத்தரவை மீறி யாராவது பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்த வழிபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதைப்போல் சிலைகளை ஊர்வலமாக சென்று நீர்நிலைகளில் கரைக்க அனுமதி இல்லை. மாறாக தனிநபராக சென்று சிலைகளை கரைக்கலாம். அப்படி இயலாதவர்கள் குறிப்பிட்ட சில கோவில்களில் சிலைகளை வைத்தால் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளே அந்த சிலைகளை எடுத்து கரைத்து விடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself