ஈரோடு: கொரோனா தடுப்பூசி முகாம் ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்!
கொரோனா தடுப்பூசி முகாமில் சமூக இடைவெளியின்றி கூடிய மக்கள் கூட்டம்.
கொரோனா 2-ம் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசிபோட மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.திடீரென தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டது. அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார மையங்களில் மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
ஈரோடு மாநகர் பகுதியில் 10 ஆரம்ப சுகாதார மையங்களில் தினமும் 100 பேருக்கு டோக்கன் அடிப்படையில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இருந்தாலும் இதைப் பற்றி அறியாத மக்கள், ஒரு மையத்தில் 500 பேர் வரை கூடி விடுகின்றனர்.100 பேருக்கு தவிர மற்றவர்களுக்கு டோக்கன் கொடுக்க முடியாத சூழ்நிலை நிலவியதால் பல்வேறு மையங்களில் தினமும் மக்கள் தடுப்பூசி போடும் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 பரிசோதனை மையங்களிலும் இன்று கோவேக்சின் இரண்டாம் டோஸ் மட்டுமே போடப்பட்டது. ஈரோடு அகஸ்தியர் வீதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று காலை முதலே 500-க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர். தடுப்பூசி போடுவதற்காக டோக்கன் வாங்க வரிசையில் காத்து நின்றனர்.
இன்று கோவேக்சின் 2-ம் டோஸ் மட்டுமே போடப்படும் என்று கூறியதால், ஆத்திரமடைந்த மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டியது தானே என்று ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.
தகவல் அறிந்து சூரம்பட்டி இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவர் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் நீங்கள் இங்கு சமூக இடைவெளி இன்றி இருப்பதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
தடுப்பூசி போடுவது குறித்த விவரம் தெரிவிக்கப்படும் அப்போது வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினார். இதையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து இரண்டாம் டோஸ் தடுப்பூசிக்காக டோக்கன் வழங்கப்பட்ட மக்கள் மட்டும் காத்திருந்து தடுப்பூசி போட்டுச் சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu