பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோவில்களின் கம்பம் எடுக்கும் விழா

பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோவில்களின் கம்பம் எடுக்கும் விழா
X

கம்பங்களை வண்டியில் ஏற்றும் காட்சி

கொரானா நோய்த்தொற்று காரணமாக பக்தர்கள்,பொதுமக்கள் இன்றி ஈரோடு பெரிய மாரியம்மன் திருக்கோவில்களின் கம்பம் எடுக்கும் விழா நடைபெற்றது

ஈரோடு மாநகரில் பிரசித்தி பெற்ற பெரியமாரியம்மன் வகையறா கோயில்களில் நடப்பாண்டுக்கான திருவிழா கடந்த 6ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 7ம் தேதி இரவு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில்களில் கம்பம் நடப்பட்டன.


அதைத்தொடர்ந்து பக்தர்கள் தினமும் கம்பங்களுக்கு புனித நீர் ஊற்றி அம்மனை வழிபட்டு வந்தனர். பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில்களில் நடப்பட்டுள்ள கம்பங்கள் மதியம் 3 மணியளவில் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டு, கம்பங்களை பூசாரிகள் தோளில் சுமந்து முக்கிய வீதி வழியாக வந்து மணிக்கூண்டு பகுதியில் மூன்று கம்பங்களும் சேர்ந்து, மாநகரில் முக்கிய சாலை வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காரைவாய்க்காலில் விடப்படும். இதில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமானதையொட்டி திருவிழா நடத்த தமிழக அரசு தடை விதித்து உள்ளது. இதனால், கம்பங்களுக்கு புனித நீர் ஊற்ற பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, அம்மனை மட்டும் பக்தர்கள் வழிபட்டு செல்லலாம் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இதன் காரணமாக, மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக மதியம் 3 மணிக்கு நடைபெறும் கம்பம் எடுக்கும் நிகழ்ச்சி, இன்று அதிகாலை 5.05 மணிக்கு மாற்றப்பட்டது. அதன்படி, ஈரோடு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோயில்களில் இருந்து எடுக்கப்பட்ட கம்பங்கள் தனித்தனி ஆட்டோக்களில் ஏற்றி மணிக்கூண்டு பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ஒரு லாரியில் 3 கம்பங்களுக்கும் ஏற்றப்பட்டு ஆர்.கே.வி.ரோடு, காவிரிரோடு வழியாக கருங்கல்பாளையம் காவிரிக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு காவிரி ஆற்றில் விடப்பட்டது..

இந்த நிகழ்ச்சிகளில் பூசாரிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!