தேர்தல் பணி : முன்னாள் ராணுவத்தினருக்கு அழைப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை சுமூகமாகவும், அமைதியான முறையில் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்திலும் தேர்தல் அமைதியான முறையில் நடத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் நாளான வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி பொதுமக்கள் அச்சமின்றி வாக்கு அளிக்கும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே துணை ராணுவத்தினர் வருகை தந்துள்ளனர். அவர்கள் மாவட்டம் முழுவதும் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.
இதைப்போல் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 5 ஆயிரம் போலீசார் தேவைப்படுகின்றனர். இதில் 2500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதுபோக ஊர்காவல் படையினர், தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதேபோல் தேர்தல் பணிக்கு முன்னாள் ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அதன்படி வரும் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஈரோடு மாவட்டத்தில் உள்ள முன்னாள் ராணுவத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இதுவரை தமிழகத்தில் நடந்த தேர்தல்கள் அனைத்திலும் தங்களது ( முன்னாள் ராணுவத்தினர்) பங்களிப்பால் சிறப்பாகவும் அமைதியான முறையிலும் நடைபெற்றன. அதேபோல் இந்த ஆண்டும் அமைதியான முறையிலும், பாதுகாப்பாகவும் கிறது நடைபெற தங்களுடைய பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தேர்தல் பணி செய்பவர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்கப்படுவதுடன் மேலும் அவர்கள் தேர்தலில் தபால் வாக்குப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படும்.எனவே விருப்பமுள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை 0424 - 2266010 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu