ஈரோடு மாநகரில் வீடு வீடாகச் சென்று கொரோனா பரிசோதனை

ஈரோடு மாநகரில் வீடு வீடாகச் சென்று கொரோனா பரிசோதனை
X

ஈரோடு மாநகராட்சியில் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்யும் பணி தொடங்கியது.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் வீடு, வீடாகச் சென்று கொரோனா பரிசோதனை செய்யும் பணி தொடங்கியது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகம் எடுத்தது. குழந்தைகள், இளைஞர்கள், வயதானவர்கள் என அனைவரையும் வயது பேதமின்றி தாக்கியது.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, சுகாதாரத் துறையினர் ஒருங்கிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தனர்.

மாநகராட்சி சார்பில் மாநகர் பகுதியில் உள்ள ஒன்றரை லட்சம் வீடுகளில் வசிப்பவர்களை கண்காணிக்க மாநகராட்சி சார்பில் 300 அலுவலர்கள், 1200 தன்னார்வலர்கள் என மொத்தம் 1,500 பேர் நியமிக்கப்பட்டனர்.

அவர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று சளி காய்ச்சல் உள்ளதா என கள ஆய்வில் ஈடுபட்டனர். இதில் கொரோனா அறிகுறியான காய்ச்சல் ,சளி ,இருமல், இருப்பவர்கள் விவரங்களை சேகரித்து இது குறித்து மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் வீடுகளுக்கு மாநகராட்சி சார்பில் நேரடியாக ஊழியர்கள் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நோயின் தன்மைக்கு ஏற்ப வீட்டில் தனிமையிலேயோ, அல்லது மருத்துவமனையிலேயோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் பலர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்த திட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியதும் கள ஆய்வு பணி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி சார்பில் வீடு வீடாக சென்று கள ஆய்வில் ஈடுபட 300 அலுவலர்கள் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒருவருக்கு 300 முதல் 350 வீடு விதம் 300 அலுவலர்களுக்கும் தனித்தனியாக பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்கள் வாரம் ஒருமுறை தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டு வீட்டில் உள்ளவர்கள் விபரங்களை கேட்டறிந்து, அவர்களில் யாருக்காவது சளி காய்ச்சல் இருமல் உள்ளதா என்ற விவரங்களை சேகரிக்கின்றனர்.

மேலும் அந்தந்த பகுதியில் உள்ள மெடிக்கல் கடைக்குச் சென்று யாராவது சளி காய்ச்சல் இருமலுக்கு மாத்திரைகள் ,மருந்து வாங்கி உள்ளார்களா என்ற விவரங்களையும் சேகரிக்கின்றனர்.

இவ்வாறாக சேகரித்த விவரங்களை மாநகராட்சியில் சமர்ப்பிக்கின்றனர். இதன் அடிப்படையில் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மட்டும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கள ஆய்வின போது வீடுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்தும் ஆய்வு மேற்கொள்கிறார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!