டாஸ்மாக் கடையில் தகராறு: தடுக்க சென்ற ஏட்டுக்கு அரிவாள் வெட்டு

டாஸ்மாக் கடையில் தகராறு: தடுக்க சென்ற ஏட்டுக்கு அரிவாள் வெட்டு
X

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் போலீஸ் ஏட்டு ராஜூ.

ஈரோடு அருகே டாஸ்மாக் கடையில் தகராறில் ஈடுபட்டவரை தடுக்க முயன்ற போலீஸ் ஏட்டை அரிவாளால் வெட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு பவானி சாலையில் சுண்ணாம்பு ஓடை பகுதியில் அரசு டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இங்கு மதியம் தண்ணீர் பந்தல்பாளையம் பகுதியை சேர்ந்த இளநீர் வியாபாரி முருகன்,( 45) மது குடித்துள்ளார். மேலும் மதுபானத்தை கடனாக வேண்டும் எனக் கேட்டு டாஸ்மாக் ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸ் ஸ்டேஷனில் பணியில் இருந்த ஏட்டு ராஜூ, (44) என்பவர் டாஸ்மாக் கடைக்கு சென்று விசாரித்தார். அப்போது நான் தான் தகராறு செய்தேன் என கூறி மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தடுக்க முயன்ற ஏட்டு ராஜீவை, தான் மறைத்து வைத்து இருந்த இளநீர் வெட்டும் அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதில் ஏட்டு ராஜூவின் வலது மார்பு மற்றும் வலது கையில் வெட்டு விழுந்தது. ரத்தம் சொட்ட சொட்ட நின்ற ஏட்டை அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் ஏட்டை வெட்டிய முருகனை அங்கிருந்தவர்கள் பிடித்து கை, கால்களை கட்டி வைத்தனர். போலீசார் அங்கு சென்று முருகனை கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

இதனையடுத்து ஏட்டு ராஜூவின் உடல்நிலை குறித்து ஈரோடு எஸ்.பி., சசி மோகன், டாக்டர்களிடம் நேரில் விசாரித்தார். ஏட்டு ராஜூ, உடல் நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!