ஈரோடு மாநகராட்சி சார்பில் 2-வது நாளாக வியாபாரிகளுக்கு கொரோனா டெஸ்ட்

ஈரோடு மாநகராட்சி சார்பில், இன்று 2-வது நாளாக காய்கறி வியாபாரிகள் 500 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஈரோடு மாநகராட்சி பகுதியில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஆர்.கே.வி.ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி பெரிய காய்கறி மார்க்கெட், ஈரோடு வ. உ .சி.பூங்கா பகுதிக்கு மாற்றப்பட்டு, தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இங்கு 700க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள், 50-க்கும் மேற்பட்ட பழக்கடைகள் உள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவத் தொடங்கியதும், தடுப்பு நடவடிக்கையாக வ.உ.சி பூங்கா பகுதியில் செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட்டும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எனினும் பொது மக்கள் பாதிக்காத வகையில் ஈரோடு பஸ் நிலையத்தில், காய்கறி மார்க்கெட் தற்காலியமாக மாற்றப்பட்டு, மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது.

பொது மக்களுடன் நேரடி தொடர்பில் காய்கறி வியாபாரிகள் உள்ளதால் அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று, முதல்நாளில் ஈரோடு பஸ் நிலையத்தில் 550 காய்கறி வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 4 மருத்துவ குழுக்கள் இதற்காக அமைக்கப்பட்டு வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இன்று 2-வது நாளாக ஈரோடு பஸ் நிலையத்தில் 500 க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதேபோல் மாநகராட்சி பகுதியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கும், விடுபட்ட மாநகராட்சி பணியாளர்களுக்கும், இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!