ஈரோட்டில் அதிமுக பிரமுகர் கொடூர கொலை, தீர்த்துக் கட்டியது யார் திடுக்கிடும் தகவல்

ஈரோட்டில் அதிமுக பிரமுகர் கொடூர கொலை, தீர்த்துக் கட்டியது யார் திடுக்கிடும் தகவல்
X
வெட்டி படுகொலை செய்யப்பட்ட அதிமுக பிரமுகர் ஈரோடு கருங்கல்பாளையம் மதிவாணன்.
ஈரோட்டில் அதிமுக பிரமுகர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார், அவரை தீர்த்துக் கட்டியது யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு கருங்கல்பாளையம் வி.ஜி.பி. நகரை சேர்ந்தவர் மதி (எ) மதிவாணன், 45. பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் தீபா பேரவை மாவட்ட இணை செயலாளராக இருந்து கடந்த சட்டசபை தேர்தலின் போது அ.தி.மு.க.வில் இணைந்தார்.

இவர் கிருஷ்ணம்பாளையம் ராமமூர்த்தி நகரில் அம்மா பொது இ–சேவை மையம் ஒன்றையும் நடத்தி வந்தார். இந்நிலையில் தனது இ–சேவை மையத்தில் மதிவாணன் அமர்ந்து கொண்டிருந்தபோது மூன்று மர்ம நபர்கள் இ–சேவை மையத்துக்குள் நுழைந்துள்ளனர்.

அப்போது மதிவாணனிடம் பேசியவாறு திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்ட தொடங்கியுள்ளனர்.

இதில் தலை, முகம் ஆகியவை முற்றிலும் சிதைந்து மதிவாணன் நாற்காலியில் அமர்ந்தபடியே பரிதாபமாக உயிரிழந்தார்.

அவர் இறந்ததை உறுதிப்படுத்தி கொண்ட மர்ம கும்பல்கள் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு நகர காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் கடந்த சில ஆண்டுக்கு முன் பிரபல ரவுடி பிரகலாதன் என்பவரை கொலை செய்த வழக்கு மதிவாணன் மீது நிலுவையில் இருப்பதால் இறந்த பிரகலாதனின் நண்பர்கள் பழிக்கு பழிவாங்கும் செயலாக மதிவாணனை கொலை செய்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!