ஈரோடு மாநகரில் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தருவேன் திருமகன் உறுதி

ஈரோடு மாநகரில் நீர் சுத்திகரிப்பு நிலையம்  அமைத்து தருவேன் திருமகன் உறுதி
ஈரோடு மாநகரில் நீர் நிலைகளின் மாசுபாட்டை தடுக்க பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தருவேன் என்று ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்தார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் திருமகன் ஈவெரா கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட நஞ்சை தளவாய்ப்பாளையம், அன்னை சத்யா நகர், விஜிபி நகர், பழனியப்பா நகர், அண்ணா நகர், பி.பெ.அக்ரஹாரம் உதுமான்ஷா வீதி, ஜோசப் தோட்டம், ஈதுக்கா வீதி என சுற்றுப்புற பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார. அப்போது, வேட்பாளர் திருமகன் ஈவெரா பொதுமக்களிடத்தில் பேசியதாவது:

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சியில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பொது கழிப்பறைகள் போதிய பராமரிப்பு இன்றி சுகாதார சீர்கேடாக உள்ளது. அதேபோல், மாநகராட்சிக்கு எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஓடும் காவிரி ஆற்றிலும், பாசன வாய்க்கால்கள் மற்றும் நீர் நிலைகளிலும் கழிவு நீர் கலந்து மாசடைந்து வருகிறது.

இதனை தடுக்க ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதாக கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. தலைமையிலான அரசு வெறும் அறிக்கை, பேட்டியின் வாயலிலாகவே தெரிவித்து வந்தனர். அதற்கான செயல்பாட்டினை எதையும் மேற்கொள்ளவில்லை. இதற்கு நிரந்தர தீர்வு காண தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைந்ததும் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.

கிழக்கு தொகுதியில் அனைத்து பகுதிகளிலும் சாலை, குடிநீர், கழிவு நீர் சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். எனவே, வாக்காளர்களாகிய நீங்கள் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் எனக்கு 'கை' சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து பூம்புகார் நகர், காமராஜ் நகர், தண்ணீர் பந்தல்பாளையம், காந்தி நகர், ஞானபுரம், பாரதி நகர், அருள்வேலவன் நகர் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னாள் மத்திய அமைச்சரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மனைவி வரலட்சுமி, திருமகன் ஈவெராவுக்கு ஆதரவாக ஈரோடு ராஜாஜிபுரம் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.



Tags

Next Story