திருவிழாவை நடத்த அனுமதி தந்த மாரியம்மன்
ஈரோடு மாநகர் பகுதியில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் வகையறா கோவில் உள்ளது. ஆண்டுதோறும் பெரிய மாரியம்மன் கோவில் குண்டம், தேர் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். பெரிய மாரியம்மன் கோவிலில் கம்பம் நடப்பட்டு கம்பத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புனிதநீர் ஊற்றுவார்கள்.
இதைப்போல் காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் குண்டம் விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் விரதம் இருந்து காப்பு கட்டி குண்டம் இறங்குவார்கள். இதேபோல் சின்ன மாரியம்மன் கோவிலில் நடைபெறும் தேர்த் திருவிழாவில், ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வடம் பிடித்து இழுத்து செல்வார்கள். விழாவின் முக்கிய நிகழ்வாக பெரிய மாரியம்மன் காரை வாய்க்கால் மாரியம்மன் சின்ன மாரியம்மன் கோவிலில் நடப்பட்டுள்ள கம்பங்கள் பிடுங்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்படும்.
இந்த நிகழ்வில் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள். ஒருவருக்கொருவர் மஞ்சள் நீரை ஊற்றி மகிழ்வார்கள். திருவிழா ஒவ்வொரு நாட்களும் விழாக்கோலம் பூண்டிருக்கும். இத்தனை விசேஷமா இந்த பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டும் கோவில் திருவிழாவை எளிய முறையில் நடத்தலாம் என மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இந்நிலையில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியதால் திட்டமிட்டபடி கோயில் திருவிழா நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் நேற்று ஈரோடு ஆர்.டி.ஓ தலைமையில் கோவில் பூசாரிகள், நிர்வாகத்தினர் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடந்தது. அதில் மீண்டும் திருவிழா நடத்தினால் கூட்டம் கூடும் இதன் மூலம் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. அந்த ஒரு சிலர் கூறினர். இதையடுத்து கோவில் திருவிழாவை ரத்து செய்து விடலாம் என முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இணை ஆணையாளர் மங்கையர்கரசி அறிவுறுத்தலின்படி கோவில் திருவிழாவில் நடத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்து பெரிய மாரியம்மன் முன்பு பூ போட்டு அருள்வாக்கு கேட்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று கோவில் செயல் அலுவலர் ரமணி காந்தன் முன்னிலையில் பெரிய மாரியம்மனுக்கு மூன்று கால சிறப்பு பூஜை செய்யப்பட்டு வெள்ளை நிற பூ, சிவப்பு நிறப் பூ போட்டு அருள்வாக்கு கேட்கப்பட்டது. வெள்ளை நிற பூ வந்தால் கோவில் திருவிழாவை ரத்து செய்ய வேண்டும், சிகப்பு நிறப் பூ வந்தால் விழாவை நடத்திக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி பெரிய மாரியம்மன் முன்பு இரண்டு முறை பூ வைத்து அருள்வாக்கு கேட்கப்பட்டது. இதில் இரண்டு முறையும் சிகப்பு நிறப் பூ வந்து விழாவை நடத்திக் கொள்ளலாம் என அம்மன் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை எளிமையான முறையில் நடத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.
அதன்படி வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு தினத்தன்று இரவு பூச்சாட்டுதலுடன் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுகிறது. 7 - ந் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியும், 12ஆம் தேதி கம்பம் எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஏப்ரல் 13ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கிடையே பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி, காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் குண்டம் விழாவில் இந்த வருடம் கொரோனா தாக்கம் காரணமாக பொதுமக்கள் குண்டம் இறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கோவில் பூசாரி மட்டும் குண்டம் இறங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதைப்போன்று சின்ன மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் குறைவான எண்ணிக்கையில் மக்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோவில் திருவிழா கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உட்பட்டு நடைபெறும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu