ஈரோட்டில் தனிக்குடிநீர் திட்டம் -முதல்வர் துவக்கி வைத்தார்

ஈரோட்டில் தனிக்குடிநீர் திட்டம் -முதல்வர் துவக்கி வைத்தார்
X

ஈரோடு மாநகர மக்களுக்கு ரூ.484 கோடி செலவில் ஊராட்சிக்கோட்டை தனிக்குடிநீர் திட்டத்தை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாய, சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீர் நேரடியாக காவிரி ஆற்றில் கலப்பதால் மாநகர மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் மாசு படிந்து காணப்படுகின்றது. இதற்கு தீர்வு காணும் வகையில் பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டை வரதநல்லூர் பகுதியில் செல்லும் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு விநியோகிக்கும் வகையில் ஊராட்சிக்கோட்டை தனிக்குடிநீர் திட்டம் செயல்படுத்த ஈரோடு மாநகராட்சியில் அப்போதைய மேயர் மல்லிகா பரமசிவம் தலைமையிலான மாமன்ற குழு தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்தது.

இதையடுத்து அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.484 கோடியே 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கான பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. ராட்சத குழாய்கள் மூலமாக சூரியம்பாளையத்தில் கட்டப்பட்டு உள்ள 42 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிக்கும், ஈரோடு வ.உ.சி. பூங்காவில் கட்டப்பட்டு உள்ள 1 கோடியே 14 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரமாண்ட குடிநீர் தொட்டிக்கும் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து பல்வேறு பகுதிகளில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு நீரேற்றம் செய்து, பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு வினியோகிக்கப்பட உள்ளது.

இந்த பணிகள் நிறைவடைந்து கடந்த சில மாதங்களாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் ஊராட்சிக்கோட்டை தனிக்குடிநீர் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, கருப்பணன், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், தென்னரசு, ஈரோடு ஆட்சியர் கதிரவன், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!