ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தேமுதிக தனித்து போட்டி
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆனந்த்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். ஆனால், அதிமுக கூட்டணி சார்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. மேலும், அதிமுக சார்பில் கூட்டணி கட்சிகளிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைச் செயலாளர் சுதீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் தேமுதிக பொருளாளர் பிரேமலதா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், இன்றைய நிலையில் தேமுதிக எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை. திருமகன் ஈவெரா இறந்த சில நாட்களிலேயே இடைத்தேர்தலை உடனடியாக அறிவித்ததில் வருத்தம்தான். அரசியலில் அனைத்தையும் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளது. அதிமுக நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை; பாஜகவும் தமது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. எப்போதும் போல இந்த முறையும் தேமுதிக தனித்து களம் காண உள்ளது. உண்மையான உழைப்பு, வாக்குறுதிகளை கொண்டு நேர்மையான முறையில் தேர்தலை சந்திப்போம். நிச்சயமாக தேர்தலில் வெற்றி பெறுவோம் என நம்புகிறோம்.
பழனிசாமி தரப்பு, பன்னீர்செல்வம் தரப்பு, பாஜக தரப்பினரும் ஆதரவு கேட்டு சந்திக்க நேரம் கேட்டனர். எப்போதும் எங்களிடம் தான் அனைவரும் ஆதரவு கேட்பார்கள். தற்போது அனைவரிடமும் நாங்கள் ஆதரவு கேட்கிறோம். கட்சிக்காக இரவு, பகலாக உழைத்தவர்களுக்கு தான் முதல் வாய்ப்பு கொடுப்போம். எங்களின் முழு கவனம் இடைத்தேர்தலில் தான் தற்போது உள்ளது. தேமுதிக எப்போது பிரச்சாரத்தை தொடங்குவோம் என்பதை விரைவில் அறிவிப்போம்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் களமிறக்கப்பட உள்ளார் என கூறிய பிரேமலதா, அதிமுக 4 அணிகளாக பிரிந்து கிடக்கிறது. சின்னம் அவர்களுக்கு இருக்கிறதா? இல்லையா? என்று தெரியவில்லை என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பிரேமலதா, தேமுதிக வேட்பாளரை ஆதரிக்க அதிமுக, பாஜக, த.மா.கா. முன்வந்தால் மனப்பூர்வமாக வரவேற்போம். பாஜகவை எதிர்க்கக்கூடாது என்று சட்டம் ஒன்றும் இல்லை. மக்களுக்கு எதிராக இருந்தால் எதிர்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu