ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்..

ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்..
X
ஈரோடு மாவட்டத்தில் நிகழ்ந்த சில க்ரைம் செய்திகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ஈரோடு மாவட்டத்தில் நிகழ்ந்த சில க்ரைம் செய்திகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்வோம்.

9 கிலோ குட்கா கடத்திய நபர் கைது:

கர்நாடக மாநிலத்தில் இருந்து கர்நாடகா அரசு பேருந்தில் தமிழகத்திற்கு குட்கா பொருட்கள் கடத்தி கொண்டு வருவதாக, ஈரோடு மாவட்டம் ஆசனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து ஆசனூர் போலீசார் ஆசனூர் பேருந்து நிறுத்தத்தில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது, அங்குள்ள கடையில் சந்தேகத்தின் பேரில் கையில் பையுடன் இருந்த நபரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அதில், அரசால் தடை செய்யப்பட்ட 9 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த நபர் சத்தியமங்கலம் அருகே உள்ள கோட்டுவீராம்பாளையம் அக்ரஹாரம் மாமரத்துதுறை பகுதியை சேர்ந்த அல்லாபகஸ் (வயது 38) என்பதும் கர்நாடக மாநிலத்தில் இருந்து குட்கா பொருட்கள் விற்பனைக்காக வாங்கி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, அல்லாபகஸை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் திருட்டு:

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கொமராபாளையம் தன்னாட்சியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவராஜ் (22). தனியார் நிதி நிறுவன ஊழியர். இவர், சம்பவத்தன்று இரவு அந்தியூர்- தவிட்டுப்பாளையம் சாலையில் நிதி நிறுவன கம்பெனி முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார்.

பின்னர், இரவு திரும்பி வந்து பார்த்தபோது, இருசக்கர வாகனத்தை, மர்ம நபர்கள் திருடி சென்றனர். பல இடங்களில் தேடியும் கிடைக்காமல் போனதால், அந்தியூர் போலீசில் சிவராஜ் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், இருசக்கர வாகனத்தை தேடி வருகின்றனர்.

தொழிலாளி பலி:

ஈரோடு மாவட்டம், கோபி பொலவக்காலிபாளையம், பெரியார் நகரை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 49). கூலித் தொழிலாளி. இவரது மனைவி அலமேலு (46).மூர்த்தி தினமும் வேலைக்கு செல்லும் போதே மது அருந்திவிட்டுதான் செல்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று அதிகாலை 6 மணியளவில் மூர்த்தி வழக்கம்போல வீட்டிலேயே மது அருந்தி விட்டு வேலைக்குச் சென்றுள்ளார். காலை சுமார் 9 மணி அளவில் அலமேலுவின் உறவுக்கார பெண் மங்கலேஸ்வரி பாட்டப்பமடை பள்ளத்து தண்ணீரில் மூர்த்தி கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மூர்த்தியகன் சகோதரர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மூர்த்தியை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு மூர்த்தி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து அலமேலு அளித்த புகாரின் பேரில், சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் அவர் மது போதையில் தவறி விழுந்து இறந்திருக்காலாம் என சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

விஷம் குடித்து தற்கொலை:

ஈரோடு சடையம்பாளையம் ரோடு முத்துசாமி காலனி பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி (66). கடந்த அக்டோபர் மாதம் இவரது மனைவி செல்வி இறந்துவிட்டார். இதனால், மனவேதனையில் இருந்த சுப்ரமணி சரியாக சாப்பிடாமல் மது அருந்தி வந்துள்ளார்.

இந்நிலையில், சுப்பிரமணி நேற்று முன்தினம் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை முயன்றுள்ளார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று சுப்ரமணி உயிரிழந்தார். இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது:

ஈரோடு மாவட்டம் கொடுமுடி கறிக்கடை தெரு முட்புதர் அருகில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை கொடுமுடி போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். இதனையடுத்து, சூதாட்டத்தில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த சங்கர் (வயது 44), பீமன் (வயது 56) , கதிர்வேல் (வயது 52) ஆகியோர் என தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், சூதாட பயன்படுத்திய 52 சீட்டுகள், ரூ. 850 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல், தாளவாடி அருகே கெட்டவாடி கிரிஜம்மா தோப்பு கிராமத்தில் சமுதாய கூடத்தில் சட்டவிரோதமாக சூதாடிய 9 பேரை கைது செய்து, 24,080 ரூபாய் பணத்தையும் தாளவாடடி போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story