ஈரோடு மாவட்டத்தில் 928.60 மி.மீ மழை பதிவு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை இடி - மின்னலுடன் கனமழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், மாலை நேரத்தில் லேசான மழை பொழிவு இருந்து வந்தது. இதில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஈரோடு மாநகரில் நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலையில் திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்து இருந்தன. மாலை 7 மணிக்கு பிறகு லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் நேரம் செல்ல செல்ல இடியுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. ஈரோடு மாநகர் பகுதியில் இரவு 8 மணி முதல் தொடர்ந்து மழை பெய்தது. தொடர்ந்து மின்னலுடன் கூடிய சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.இந்த மழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் கழிவுநீர் ஓடைகளில் நிரம்பி சாலைகளில் பெருக் கெடுத்து ஓடியது.இதன் காரணமாக தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது.
கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை முதல் இரவு வரை விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதேபோல். மாவட்டத்தில் அந்தியூர் , கொடுமுடி சத்தி, நம்பியூர் , தாளவாடி, கவுந்தப்பாடி, சென்னிமலை, எலந்தகுட்டைமேடு, அம்மாபேட்டை கொடிவேரி, குண்டேரிப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளிலும் விடிய விடிய பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இரவு முழுவதும் மழை பெய்ததால் அங்கு குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதில், அதிகபட்சமாக கோபியில் 97 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
மாவட்டம் முழுவதும் இன்று அதிகாலை வரை பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-
ஈரோடு - 25.00 ,
பெருந்துறை- 38.00 ,
கோபி- 97.00 ,
தாளவாடி - 16.00 ,
சத்தி - 55.00 ,
பவானிசாகர்- 37.20 ,
பவானி - 21.00 ,
கொடுமுடி - 80.00 ,
நம்பியூர் - 62.00 ,
சென்னிமலை - 50.00 ,
மொடக்குறிச்சி- 75.00 ,
கவுந்தப்பாடி- 40.00 ,
எலந்தகுட்டைமேடு - 78.4 ,
அம்மாபேட்டை- 55.00 ,
கொடிவேரி - 49.20 ,
குண்டேரிப்பள்ளம்- 58.40 ,
வரட்டுப்பள்ளம்- 91.40 என மாவட்டத்தில் 928.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu