தந்தை கண் முன்னே விடிய விடிய மகனை அடித்த போலீஸ், வேதனையில் பிரிந்த தந்தையின் உயிர் செய்திக்கு ஈரோடு மாவட்ட காவல்துறை மறுப்பு
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்.
அறச்சலூரில் தந்தை கண் முன்னே விடிய விடிய மகனை அடித்த போலீஸ், வேதனையில் பிரிந்த தந்தையின் உயிர் வெளியான செய்திக்கு ஈரோடு மாவட்ட காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தினத்தந்தி டிவியின் எக்ஸ் வலைதளத்தில் தந்தை கண் முன்னே விடிய விடிய மகனை அடித்த போலீஸ், வேதனையில் பிரிந்த அப்பாவின் உயிர் என்ற தலைப்பில் வந்த செய்திக்கு ஈரோடு மாவட்ட காவல்துறையினர் வெளியிட்டுள்ள மறுப்பு அறிக்கையில்,
கடந்த டிச.23ம் தேதி சுமார் மாலை 5 மணியளவில், ஈரோடு மாவட்டம், அறச்சலூர், வடுகப்பட்டி அஞ்சல், வினோபா நகர், 7வது வீட்டில் வசித்து வரும் ராஜேந்திரன்(வயது 55) என்பவர், தனது 13 வயது இளைய மகன் உடன் இருசக்கர வாகனத்தில் ஈரோடு- காங்கேயம் சாலையில் உள்ள அறச்சலூர் காவல் நிலையம் அருகே குடிபோதையில் வேகமாக சென்று அறச்சலூர் காவல் நிலையம் முன்புறம் உள்ள சாலை தடுப்புகளை மோதி தள்ளிவிட்டு நிற்காமல் சென்றார்.
அப்போது, பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பொதுமக்கள் சத்தம் போட, சுமார் மாலை 5.15 மணிக்கு மணியளவில் தானாக அருகில் உள்ள அறச்சலூர் காவல் நிலையத்திற்கு வந்தார். விசாரணையில் அவர் மதுபோதையில் வாகனம் ஓட்டியது தெரிய வந்ததால், மது போதையில் வாகனம் ஓட்டியதற்காக வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அவர் நிதானமான நிலையில் இல்லாததால் அவரது சகோதரர் வீரகுமாரை அழைத்து மது போதையில் உள்ள சகோதரரை அழைத்துச் செல்ல கூறப்பட்டது.
பின்னர், அவரது சகோதரர் வீரகுமார் மற்றும் ராஜேந்திரனின் 18 வயது மூத்த மகன் ஆகியோர் அறச்சலூர் காவல் நிலையத்திற்கு வந்து, மதுபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்வதற்கு ஆட்சேபனை தெரிவித்து ஒத்துழைப்பு தராமலும், வாகனத்தை திரும்ப கேட்டு காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்தும், கைபேசியில் புகைப்படம் எடுத்தனர்.
எனினும், பரிசோதனையில் ராஜேந்திரன் 100 மி.லி அளவில் மது அருந்தியிருந்தது கண்டறியப்பட்டதால், குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக வழக்குப் பதிவு செய்த பின்னர் மாலை 6.15 மணியளவில் அனைவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். அதன் பின்னர் மேற்படி ராஜேந்திரன் என்பவர் 24ம் தேதி அன்று அதிகாலை 2 மணிக்கு இறந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, ராஜேந்திரனின் 18 வயது மூத்த மகன் என்பவர், தனது தந்தையின் முன் தன்னை காவல்துறையினர் தாக்கியதால் மன உளைச்சல் காரணமாக தனது தந்தை இறந்து விட்டதாகவும் அதன்பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் மனு அளித்ததன் மீது அறச்சலூர் காவல் நிலையத்தில் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் தன்னை தாக்கியதாக புகார்தாரர் குற்றம் சாட்டியுள்ளதால், வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் அனைத்தும் சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது எனவும், மேற்படி செய்தி அறிக்கை தவறானது எனவும் மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக தவறான செய்திகளை பரப்புபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu