கள்ளச்சாராய வியாபாரி கைது உள்ளிட்ட ஈரோடு மாவட்ட கிரைம் செய்திகள்

கள்ளச்சாராய வியாபாரி கைது உள்ளிட்ட ஈரோடு மாவட்ட கிரைம்  செய்திகள்
X

சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட செந்தில்.

கள்ளச்சாராய வியாபாரி கைது உள்ளிட்ட ஈரோடு மாவட்ட கிரைம் செய்திகளை அறிய தொடர்ந்து படியுங்கள்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள கோட்டபாளையம் குளியங்காட்டுத்தோட்டம் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை நடைபெற்று வருவதாக புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கோட்டபாளையம் காரப்பாடியை சேர்ந்த செந்தில் (வயது 42) என்பதும், சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 லிட்டர் சாராயம், 200 லிட்டர் சாராய ஊறல் மற்றும் ரொக்கம் ரூ.3200 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கஞ்சா விற்ற 2 பேர் கைது

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள முருகன் தியேட்டர் பகுதியில் ஈரோடு மதுவிலக்கு எஸ்.எஸ்.ஐ. செந்தில்குமார் நேற்று ரோந்து சென்றார். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வந்த ஈரோடு புதுமை காலனி ஜீவானந்தம் வீதியை சேர்ந்த செல்லப்பாண்டி(56), மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த சிவசாமி(57) ஆகிய 2 பேரை கைது செய்தார். அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 850 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொழிலாளி பலி

கொடுமுடி ஊஞ்சலூர் ஆட்டுக்காரன்புதூரை சேர்ந்த சோமசுந்தரம் மகன் கார்த்திகேயன் (18). 9ம் வகுப்பு வரை படித்துள்ளார். மனநலம் குன்றியதால் அதற்கான சிகிச்சை பெற்று தற்போது கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 29ம் தேதி நந்தகுமார் என்பவருடன் ஊஞ்சலூரில் உள்ள தனியார் அறக்கட்டளை மடத்தின் கட்டிட மராமத்து வேலைக்கு கார்த்திகேயன் சென்றார். அப்போது கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து காயம் அடைந்தார். ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திகேயன் உயிரிழந்தார். இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதியவர் தற்கொலை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வெள்ளித்திருப்பூர் ரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் பூமணி (வயது75) இவர் அவரது மகள் செல்வி பராமரிப்பில் வசித்து வந்தார். பூமணி வயது முதிர்வின் காரணமாக வீட்டிலேயே இருந்து வந்தார். மேலும் பூமணி கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த பூமணி கடந்த 6ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.பின்னர், பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story