ஈரோடு மாவட்ட கிரைம் செய்திகள் (19.10.2022)
சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சத்தியமங்கலத்தில் சட்டவிரோதமாக மது விற்ற 2 பேர் கைது:- ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்துரை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் தர்மா (24), சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த போஸ் மகன் பிரபாகரன் ஆகியோர் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடையின் அருகே டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிந்த போலீசார், 434 மது பாட்டில்கள் மற்றும் மது விற்பனை செய்த தொகையான ரூ.22,770 ரூபாயை பறிமுதல் செய்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அந்தியூர் அருகே குட்கா விற்பனை செய்த 2 பேர் கைது:- ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள மாத்தூரில் உள்ள மளிகை கடையில் குட்கா விற்பனை நடைபெறுவதாக வெள்ளித்திருப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள மளிகை கடையில் சோதனை செய்தனர். சோதனையில் ரூ.3,810 மதிப்புள்ள குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கடையின் உரிமையாளரான ரவி (44) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரெட்டிபாளையம் குரும்பபாளைத்தை சேர்ந்த ராஜ்குமார் (40) என்பவர் கர்நாடக சென்றுவிட்டு வரும்போது குட்கா பொருட்கள் வாங்கி வந்தது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது:- ஈரோடு சாஸ்திரிநகர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக சூரம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று அங்கு சென்று சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.விசாரணையில் அவர்கள், சாஸ்திரிநகர் வாய்க்கால்மேடு பகுதியை சேர்ந்த சந்திரசேகரனின் மகன் பிரதாப் (வயது 19), கொல்லம்பாளையம் திரு.வி.க.வீதியை சேர்ந்த சின்னகாளையின் மகன் அய்யனார் (19) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய சோதனையில் ஒரு கஞ்சா பாக்கெட்டும், 30 போதை மாத்திரைகளும், ஒரு ஊசியும் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவர்கள் 2 பேரும் போதை மாத்திரை கள், ஊசி, கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பிரதாப், அய்யனார் ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கஞ்சா, போதை மாத்திரைகள், ஊசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தாளவாடி அருகே சந்தன மரம் வெட்டிய 4 பேருக்கு அபராதம்:- சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனக்கோட்டம் கேர்மாளம் வனச்சரகத்திற்கு உட்பட்ட குத்தியாலத்தூர் காப்புகாட்டுப் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது அங்கு சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சந்தன மரம் வெட்டிய நபர்கள் யார் என வனத்துறையினர் ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர். இதில் கேர்மாளம் அருகே உள்ள கானாகரை கிராமத்தை சேர்ந்த ஜடைசாமி (35), முருகேஷ் (32), மகாதேவா (48) மற்றும் கர்நாடக மாநிலம் எத்தே கவுடண்தொட்டியை சேர்ந்த மாதேகவுடா (45) என 4 பேரும் சந்தன மரம் வெட்டியது தெரிய வந்தது. அவர்களை பிடித்து விசாரணை மேற்கொ ண்டதில் 4 பேரும் சந்தன மரம் வெட்டியதை ஒப்புக்கொண்டனர். பின்னர் ஆசனூர் வன கோட்ட அலுவலர் தேவேந்திர குமார் மீனா உத்தரவின் பேரில் 4 நபர்களுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்து 40 கிலோ சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu