வெங்காயம் மோசடி செய்த பெண் கைது உள்ளிட்ட ஈரோடு மாவட்ட கிரைம் செய்திகள்
வெங்காயத்தை வாங்கி மோசடி செய்த ரேவதி.
திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம்.தண்டகவுண்டன்புதூர்ரோடு, ஆசாத் நகரை சேர்ந்தவர் ஷாஜகான் மகன் பசூல் அகமது (29). இவர், ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம், கடந்த மார்ச் மாதம் ஆன்லைன் மூலம் பவானி சித்தோட்டை அடுத்த காளிங்கராயன்பாளையம் கே.கே. நகரை சேர்ந்த கோவிந்த கிருஷ்ணன் மனைவி ரேவதி (48) வெங்காயம் ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து, சுமார் 12 டன் வெங்காயத்தை பசூல் அகமது அனுப்பியுள்ளார். இதன் மதிப்பு ரூ.2.17 லட்சம் ஆகும். ஆனால், இதற்கான பணத்தை தராமல் ரேவதி காலம் தாழ்த்தி வந்துள்ளார். பசூல் அகமது பல முறை பணம் கேட்டு நேரிலும், போனிலும் தொடர்பு கொண்டபோது வெங்காயத்துக்கான பணத்தைத் தராமல் அலைக்கழித்து வந்துள்ளார். இதுகுறித்து, பசூல் அகமது சித்தோடு போலீசில் புகார் அளித்தார். இதையறிந்து கொண்ட ரேவதி தலைமறைவானார். இந்நிலையில், லட்சுமி நகர் சோதனை சாவடி அருகே ரேவதி நிற்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், சித்தோடு எஸ்.எஸ்.ஐ. ஸ்டெல்லா சுகந்தி மற்றும் போலீசார் அங்கு சென்று ரேவதியை சுற்றிவளைத்துபிடித்து கைது செய்தனர். பின்னர், ஈரோடு குற்றவியல் நடுவர் மன்றத் தில் போலீசார் ரேவதியை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
லாரியில் டீசல் திருடிய 2 பேர் கைது
சித்தோடு அருகேயுள்ள மாயவரத்தில் தனியார்காட்டன் மில் உள்ளது. இங்கு, ஆண்கள். பெண்கள் என ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கு, டிரைவர்களாக சித்தோடு, ஆர்.என்.புதூரை சேர்ந்த அடைக்கலம் மகன் பழனிவேல் (48) கடந்த 13ஆண்டுகளாகவும், பவானி கல் தொழிலாளர் வீதியை சேர்ந்த சக்கர பாண்டிமகன் சிவபிரகாஷ் (32) கடந்த 6 மாதமாகவும் வேலை செய்து வந்தனர். இவர்கள் இருவரும் மில்லுக்குச் சொந்தமான லாரியிருந்து 450 லிட்டர் டீசலை திருடி விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து காட்டன் மில் நிர்வாகி அளித்த புகாரில் பேரில் சித்தோடு போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட11 பேர் கைது
பெருந்துறை அடுத்துள்ள பணிக்கம்பாளையம், பாரத் நகர் பகுதியில் சேவல் சண்டை நடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், பெருந்துறை போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு முள்புதரில் சேவல் வைத்து சூதாட்டம் நடத்துவரை கண் பிடித்தனர். இதையடுத்து, அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தனிஷ் பர்மன் (30), அனோகேஷ் பைடியா (27), கமலேஷ் பைடியா (21), நஸ்ருதின் கைன் (23), முபாரக் பிஸ்வாஸ் (24), பெய்ஜிகாஜி (34), தன் மேஸ் மண்டல் (23), ரஹி மண்டல் (33), அபிக்ஜித் தாஸ் (26), தப்லு மகாஜன் (24), மனோப் மண்டல் (34) என்பது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் 11 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். மேலும் 4 சேவல்கள் மற்றும் ரூ.4,720 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கள் விற்ற முதியவர் கைது
கோபியை அடுத்துள்ள சிறுவலூர் பகுதியில் தடை செய்யப்பட்ட கள் விற்பனை செய்யப்படுவதாக சிறுவலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிறுவலூர் போலீசார், சந்திராபுரம் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, செங்காளிகாடு பகுதியில் ஒருவர் பனை மரத்தின் கள் விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜூ (64) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து ராஜூவை கைது செய்து அவரிடம் இருந்து 2 லிட்டர் கள்ளையும் பறிமுதல் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu