தாளவாடி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் ஈரோடு ஆட்சியா் கள ஆய்வு!

தாளவாடி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் ஈரோடு ஆட்சியா் கள ஆய்வு!
X

ஆசனூர் பங்களாத்தொட்டி பகுதியில் ரூ.14.43 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் நியாய விலை கடை கட்டிடத்தின் கட்டுமானப் பணியினை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

"உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (மார்ச் 26) ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மக்களை நாடி, குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தின்படி ஈரோடு மாவட்ட ஆட்சியர், ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, மக்களின் சேவைகள், தங்கு தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில், கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து வருகிறார்.

அந்த வகையில், இன்று (மார்ச் 26) ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், தாளவாடி வட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, ஆசனூர் கிராமம் பங்களாத் தொட்டி பகுதியில் பழங்குடியினர் நலன் தொல்குடி திட்டத்தின் கீழ் ரூ.6.70 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட்டு வருவதையும், அதே பகுதியில் ரூ.14.43 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நியாயவிலை கடை கட்டப்பட்டு வருவதையும் அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


மேலும், பழங்குடியினர் சமுதாயக்கூடத்தினை புனரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, தாளவாடி வட்டத்தில் பாரதிபுரத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் குளிர்பதனக் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்களை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை அதிகளவில் இருப்பு வைத்து, பயன்பெறும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, தாளவாடி வட்டம், சிக்ககாஜனூர் கிராமத்தில் தாமரைச்செல்வி என்ற பெண் விவசாயி இயற்கை முறையில் விளைவித்த பொருட்களை பார்வையிட்டு, விவசாய பணிகள் குறித்து விவசாயியுடன் கலந்துரையாடினார். இதனையடுத்து, சூசைபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, புற நோயாளிகள் பிரிவு, பராமரிக்கப்படும் பதிவேடுகள், மருந்துகளின் இருப்பு ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.


மேலும், மல்லன்குழி ஊராட்சியில் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மைய கட்டிடத்தினையும், மல்லன்குழி கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 11 வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணியினை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, மல்லன்குழி மாதிரி பள்ளியினை பார்வையிட்டு, மாணவர்களின் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார். மேலும், பள்ளியின் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, எரகனஹள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் துறையின் சார்பில் செயல்படும் குழந்தைகள் மையத்தினை ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ள உணவின் மாதிரி, குழந்தைகளின் எடை, உயரம் ஆகியவற்றினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.


அதனைத் தொடர்ந்து, ஜீரஹள்ளி கெட்டவாடி பனஹள்ளியில் 2.10 கி.மீ நீளத்திற்கு தார்சாலை அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, செயலாளர் மற்றும் துணை இயக்குநர் (ஈரோடு விற்பனை குழு) சாவித்திரி, தாளவாடி வருவாய் வட்டாட்சியர் ஜாகீர் உசைன், தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலர் அர்த்தனாரீஸ்வரன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story