பெருந்துறை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஈரோடு ஆட்சியர் ஆய்வு!

பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், காஞ்சிக்கோயில், நல்லாம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திங்களூர், வெட்டையன்கிணறு, சீனாபுரம் ஊராட்சிகள் மற்றும் காஞ்சிக்கோயில், நல்லாம்பட்டி பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேற்று (மே.6) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, பெருந்துறை வட்டம், காஞ்சிகோயில் பேரூராட்சி, கரிச்சிகவுண்டன்பாளையம் பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.95 கோடி மதிப்பீட்டில் வார்டு எண்.4 பள்ளபாளையம் சாலை சந்திப்பு முதல் சித்தோடு சாலை வரை சாலை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, தெற்கு ரத வீதியில் முதலீட்டு மானியத்தின் கீழ் ரூ.77 லட்சம் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டப்பட்டு வருவதையும், நல்லாம்பட்டி பேரூராட்சி நல்லாம்பட்டியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தைக்கு நடை மேடை அமைக்கப்பட்டு வருவதையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதைத் தொடர்ந்து, சீனாபுரம் ஊராட்சி, சீனாபுரத்தில் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.82 கோடி மதிப்பீட்டில் திங்களூர் சாலை முதல் மலைசீனாபுரம் வழியாக ஊஞ்சபாளையம் சின்னமலை பாளையம் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து, பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், திங்களூர் ஊராட்சி, நெசவாளர் காலனியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டியில் ரூ.2.74 லட்சம் மதிப்பீட்டில் தானியங்கி நீர்நிலை கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து, வெட்டையன்கிணறு ஊராட்சி, வெட்டையன்கிணறு கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.10 வீதம் ரூ.24.80 லட்சம் மதிப்பீட்டில் 8 வீடுகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பயனாளியுடன் கலந்துரையாடினார்.
இந்த ஆய்வுகளின் போது, பெருந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் தேவகி, பெருந்துறை வட்டாட்சியர் ஜெகநாதன் உள்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu