பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஈரோடு ஆட்சியர் ஆய்வு!

பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பவானிசாகர் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (மே.7) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பவானிசாகர் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, சத்தியமங்கலம் வட்டம், கேசர்காடன் பகுதியில் தீபா என்பவர் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் திட்டத்தின் கீழ் சிறுதானியங்களை முதன்மை பதப்படுத்தும் இயந்திரங்கள் அமைக்க மொத்த மதிப்பீட்டு தொகை ரூ.25 லட்சத்தில் 75 சதவீதம் மானியம் (அ) அதிகபட்சமாக ரூ.18.75 லட்சம் மதிப்பீட்டில் மானியத்துடன் கடனுதவி பெற்று வீட்டா மில்லட்ஸ் என்ற நிறுவனத்தினை நடத்தி வருவதைத் தொடர்ந்து, மேற்படி நிறுவனத்தினை செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, ஆலோசனைகள் வழங்கினார்.
தொடர்ந்து, பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம், கொத்தமங்கலம் ஊராட்சி உப்புப்பள்ளம் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் நபார்டு வங்கியின் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் சத்தி கொத்தமங்கலம் சாலை முதல் உப்புப்பள்ளம் சாலை வரை சாலை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு, உயரம் மற்றும் நீளத்தினை அளவீடு செய்து ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் இக்கரைத்தத்தப்பள்ளி கிராமம் பவானிநகர் குடியிருப்பு பகுதியில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் 480 அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு, மேலும் குடிநீர் வசதி, மின்சார வசதி குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இதையடுத்து, பவானிசாகர் பேரூராட்சியில் ரூ.6.92 கோடி மதிப்பீட்டில் இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் 120 வீடுகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, பவானிசாகர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரில் அழுத்தம் எவ்வளவு உள்ளது என்பதையும், கடைசி இணைப்பு வரை ஒரே அழுத்தத்தில் குடிநீர் வழங்கப்படுகிறதா என்பதையும் கேட்டறிந்து, அழுத்தமானி மூலம் குடிநீரில் அழுத்தத்தினை ஆய்வு மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து, புங்கர் ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழுவினரின் மதி அங்காடியின் கட்டுமானப்பணிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, உரிய காலத்திற்குள் பணிகளை முடித்து, பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்கள் தங்கும் விடுதிகள், வகுப்பறைகள், கணினிகளுடன் கூடிய ஆய்வகம், நூலகம், உள் விளையாட்டு அரங்கம், கலையரங்கம், பல்நோக்கு அரங்கம், நவீன உணவு கூடங்கள், சமையல் கூடம் ஆகியவற்றை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், பயிற்சி பெறும் அலுவலர்களிடம் பயிற்சியினை முழுமையாக பெற்று, பணிகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியதோடு, அங்குள்ள நூலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, 5000-க்கும் மேற்பட்ட அரசாணைகள் பராமரிக்கப்பட்டு வருவது குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வுகளின் போது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) (பொ) வரதராஜன், பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலட்சுமி, பிரகாஷ், சத்தியமங்கலம் வட்டாட்சியர் ஜமுனாதேவி, வேளாண்மைத் துறை துணை இயக்குநர் நிர்மலா உட்பட வேளாண் அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu