முத்தரப்பு குழு அமைத்து நூல் உயர்வை கட்டுப்படுத்த விசைத்தறியாளர்கள் மனு
கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த விசைத்தறியாளர்கள்.
ஈரோடு மாவட்டத்தில் வீரப்பன்சத்திரம், சித்தோடு, அசோகபுரம், மொடக்குறிச்சி என மாவட்டம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. சமீபகாலமாக நூலின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விசைத்தறியாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு 100-க்கும் மேற்பட்ட விசைத்தறியாளர்கள் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சுரேஷ் தலைமையில் திரண்டு வந்து நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்த மிகப்பெரிய தொழிலான ஜவுளித்துறையில் இரண்டாவது இடத்திலிருக்கும் தமிழகத்தில் 6 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. இதன் மூலம் மாதம் 3 ஆயிரம் கோடிக்கும் வருடம் 44 ஆயிரம் கோடிக்கும் உற்பத்தி நடைபெற்று வருகிறது. நாட்டின் துணி தேவையில் 60 சதவீத சாதாரண விசைத்தறிகள் பூர்த்தி செய்கின்றன. கடந்த டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை ஜவுளி உற்பத்திக்கு தேவையான நூல்கள் விலை முன்பு இருந்த விலையை விட 50 முதல் 60 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
பஞ்சின் விலை குறைவாகவே இருந்தபோதிலும் பஞ்சு நூல் ஆகியவற்றை ஏற்றுமதி செய்து செயற்கையான தட்டுப்பாட்டை உண்டாக்கி அவ்வப்போது நூல் விலையை உயர்த்தி வருகின்றனர். இதுதொடர்பாக ஏற்கனவே நூல் விலை நிர்ணயக் குழு அமைத்து நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டி கூறியிருந்தோம். சிமெண்ட் விலை உயரும்போது அரசு தலையிட்டு அதனை குறைக்க வழிவகை செய்தது. அதேபோல் தற்போது தாறுமாறாக உயர்ந்து உள்ள நூல் விலை உயர்வினால் ஜவுளித்துறை முடங்கிப் போகும் நிலையில் உள்ளது. எனவே உடனடியாக அரசு தலையிட்டு நூல் உற்பத்தியாளர்கள் எங்களைப் போன்ற நூல் உபயோகிப்போர் சங்கங்கள் அரசுத் தரப்பு அதிகாரிகள் என முத்தரப்பு குழு அமைத்து அதன் மூலம் நூல் விலை நிர்ணயம் செய்து நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவர் அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர். முன்னதாக சம்பத் நகர் கொங்கு கலையரங்கத்தில் இருந்து ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட விசைத்தறியாளர்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று மனு கொடுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu