ஈரோட்டில் பள்ளத்தில் சிக்கிய லாரி: போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு சென்னிமலை சாலையில் மர பாரம் ஏற்றி வந்த லாரி சாலையின் நடுவே கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் முழுவதும் பெய்த மழையின் காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கி நின்று கொண்டிருந்தது. இந்த தண்ணீரில் சாலையோரத்தில் இருந்த பள்ளம் லாரி ஓட்டுநரின் கண்ணுக்குத் தென்படவில்லை. எதிர்பாராதவிதமாக லாரியின் பின்புறம் சக்கரம் சேறும் சகதியும் நிறைந்த பள்ளத்தில் சிக்கியதால், நிலைதடுமாறிய லாரி சாலையின் நடுவே கவிழ்ந்தது. சுதாரித்துக்கொண்ட லாரி ஓட்டுநர் லாரியில் இருந்து வெளியேறியதால் உயிர் சேதம் ஏற்படவில்லை.

இதேபோல் அப்பகுதியில் சாலையில் தேங்கி நின்றுகொண்டிருந்த தண்ணீரில் சென்னிமலையில் இருந்து ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்த ஈச்சர் வேன் ஒன்று சாலையில் ஏற்பட்ட பள்ளத்தின் சேற்றில் சிக்கி சாய்ந்து நின்றது. இந்த இரு கனரக வாகனங்களை பொக்லைன் இயந்திரங்களை கொண்டு தற்போது மீட்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக ஈரோடு சென்னிமலை நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது. ஈரோடு சென்னிமலை சாலையில் பயணிக்கும் சாலை வாசிகளை வேறு வழியாக செல்ல காவல் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர், இந்த இருவிபத்து காரணமாக ஈரோடு சென்னிமலை சாலையை முறையாக பராமரித்து, பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!