பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட மாநில தலைவர் அண்ணாமலை
பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை ஈரோடு தெற்கு மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தற்போது நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பா.ஜனதா கட்சிக்கு மிக, மிக முக்கியமானது. ஏனென்றால் நாம் இந்த முறை தனித்து களம் இறங்கியுள்ளோம். இதில் நம்முடைய முழு வலிமையையும் மற்றவர்களுக்கு காட்ட வேண்டும். தனித்து போட்டியிடுவதன் மூலம் நம்முடைய கட்சிக்கு கிடைக்ககூடிய வாக்கு சதவீதத்தையும் நாம் அறிந்து கொள்ள முடியும் என்பதால் இந்த தேர்தலை நாம் முக்கியமான தேர்தலாக பார்க்கிறோம்.
தேர்தலுக்கு இன்னும் 11 நாட்கள் இருப்பதால் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தினமும் மக்களை அவர்கள் இருக்க கூடிய இடங்களுக்கே நேரில் சென்று சந்திக்க வேண்டும். அவர்களிடம் மத்திய பா.ஜனதா அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்களை அவர்களிடம் எடுத்து கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும்.
வேட்பாளர்கள் களத்தில் தங்களது முழு திறமையையும், உழைப்பையும் கொட்டி பணியாற்ற வேண்டும். இந்த தேர்தலில் கட்சி உங்களது முழு உழைப்பையும் எதிர்பார்க்கிறது. எனவே வேட்பாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பா.ஜ.கவின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஈரோடு மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் கடுமையான போட்டி நிலவுகிறது. உள்ளாட்சியில் நல்லாட்சி நடைபெறுவதற்கு ஈரோடு மக்கள் கண்டிப்பாக பா.ஜனதாவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்வார்கள். அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
தி.மு.க. நீட்தேர்வு விவகாரத்தில் கண்துடைப்பு நாடகம் நடத்தி வருகிறது. நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு, எங்கு சென்றாலும் அவர்களுக்கு கிடைக்கும் ஒரே பதில் நீட் தேர்வு நல்லது என்பது தான். நீட் தேர்வு தீர்மானமானது கடந்த 2017-ம் ஆண்டே நிராகரிக்கப்பட்டு விட்டது. நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரான ஒன்று கிடையாது. அது எல்லோருக்கும் நல்லது தான். தி.மு.க. பதவியேற்று 8 மாதங்கள் ஆகிறது. ஆனால் இதுவரை அவர்கள் ஒன்றும் செய்யவில்லை.
இந்தியாவை 70 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி செய்த மக்கள் நலத்திட்டங்களை விட 7 ஆண்டுகள் ஆட்சி செய்த பா.ஜனதா எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செய்துள்ளது. இந்தியா மட்டுமின்றி தமிழகத்திற்கு எண்ணற்ற நல்ல திட்டங்கள் பிரதமர் மோடி செயல்படுத்தியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu