24 ஆயிரம் நெசவாளர்களுக்கு ரூ.11.57 கோடி போனஸ் வழங்கல்
செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பயனாளிகளுக்கு போனஸ் வழங்கினார்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பில் 20 நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த 4,704 உறுப்பினர்களுக்கு ரூ.3.37 கோடி மதிப்பீட்டில் போனஸ் மற்றும் பங்கு ஈவுத்தொகை மற்றும் வருவாய்த்துறையின் சார்பில் 90 நபர்களுக்கு ரூ.9.63 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் 5 நாட்களிலேயே நிறைவேற்றப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித்தொகையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4,000 வழங்கப்பட்டுள்ளது. அதே போல் மகளிருக்கும், உடல் ஊனமுற்றோருக்கும் அரசு நகரப்பேருந்துகளில் கட்டணமில்லா பயண சலுகை அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆவின் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டும் வகையில் பெட்ரோல் விலையானது லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது.
சென்னிமலை ஒன்றியம் மற்றும் சென்னிமலை பேரூராட்சி உட்பட அனைத்து குடியிருப்புகளும் பயனடைகின்ற வகையில் சுமார் ரூ.250 கோடி மதிப்பீட்டில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்கியுள்ளார்கள். ஈரோடு மாவட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பில் மொத்தம் 188 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த சங்கங்களில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லாபத்தில் செயல்படும் சங்கங்களின் சங்க உறுப்பினர்களுக்கு போனஸ் மற்றும் பங்கு ஈவுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சங்கங்களில் லாபத்தில் செயல்பட்டு வரும் 141 சங்கங்களின் 24,091 சங்க உறுப்பினர்களுக்கு ரூ.11.57 கோடி மதிப்பீட்டில் போனஸ் மற்றும் பங்கு ஈவுத் தொகை வழங்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார். இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu