பேராசை பெருநஷ்டம்: கற்று தந்த ஆசிரியருக்கே கற்று கொடுத்த குறுஞ்செய்தி
மாதிரி படம்
தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று பல்வேறு வகைகளில் மோசடி நடந்து வருகிறது. வங்கியில் இருந்து மேனேஜர் பேசுவது போன்று பேசி மோசடி செய்வது, சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்து மோசடி செய்வது என்று கூறிக்கொண்டே செல்லலாம். காவல்துறை என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் ஏமாறுபவர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்நிலையில் ஈரோடை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் செல்போனில் வந்த எஸ்.எம்.எஸ்.ஐ நம்பி லட்சக்கணக்கான பணத்தை இழந்துள்ளார். இதுகுறித்த விவரம் வருமாறு:-
ஈரோடு பழையபாளையம், விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 62).ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்து பரபரப்பான ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
என் செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. வீட்டிலிருந்தே வேலை செய்து தினமும் ரூ.2 ஆயிரம் சம்பாதிக்கலாம் என தெரிவித்ததால் நானும் அந்த வாட்ஸ்-அப் எண்ணிற்கு தகவல் அனுப்பினேன். அதற்கு அவர்கள் ஒரு இணையதள முகவரி கொடுத்து அதில் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தினர். அதன்படி நானும் பதிவு செய்தேன்.
இதையடுத்து ரூ.200-க்கு ரீசார்ஜ் செய்து 100 ரூபாய் சம்பாதித்து 300 திரும்ப பெறலாம். 500 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து, 650 ரூபாய் திரும்ப பெறலாம். இவ்வாறாக 50 ஆயிரம் வரை திட்டங்களை கூறினர்.முதல் நாளில் 100 ரூபாய் கணக்கிலும், அடுத்து வந்த நாட்களில் ஆயிரக்கணக்கிலும் ரீசார்ஜ் செய்து பணம் பெற்றேன்.
கடந்த மாதம் 21ஆம் தேதி 10 ஆயிரம் ரூபாயில் துவங்கி 3.32 லட்சம் ரூபாய் வரை ரீசார்ஜ் செய்து, 4.60 லட்சம் ரூபாய் பெற விண்ணப்பித்தேன். 72 மணி நேரத்தில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றனர். இதன் பிறகு கடந்த மாதம் 22ம் தேதி 10 ஆயிரம் ரூபாய் ரிசார்ஜ் செய்து 13 ஆயிரம் ரூபாய் திரும்ப வரை பெற்றேன். 23ஆம் தேதி 10 ஆயிரத்தில் தொடங்கி மூன்று லட்சம் ரூபாய்வரை ரீசார்ஜ் செய்து முடித்து 4.57 லட்சம் ரூபாய் பெற விண்ணப்பித்தேன். அப்போதும் தொகை அதிகமாக இருப்பதால் 72 மணி நேரத்துக்கு பின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் 9.17 லட்சம் ரூபாய் இதுவரை வரவில்லை. பண பரிமாற்றம் முழுவதும் வங்கி கணக்கில் நடந்தது. எனது தொகையை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் .திட்டத்தின் உண்மை தன்மையை அறிந்து இது போல் யாரும் ஏமாறாமல் பாதுகாக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளார்.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று ஓய்வு பெற்ற ஆசிரியர் குணசேகரன் சைபர் கிரைம் அலுவலகத்திற்கு சென்று மோசடி குறித்து விளக்கம் அளித்தார். அவரிடம் சைபர் கிரைம் போலீசார் மோசடி எவ்வாறு நடைபெற்றது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu