பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும்: சிறுதொழில்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்க கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள்.
ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்க (ஈடிசியா) பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் திருமூர்த்தி தலைமை தாங்கி பேசினார். அதைத்தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
இரும்பு, பிளாஸ்டிக், ஜவுளி நூல் போன்றவற்றின் மூலப்பொருட்களின் விலையை குறைக்க வேண்டும். காகித பொருட்கள், அட்டைகளுக்கான ஜி.எஸ்.டி. சமீபத்தில், 12 சதவீத்ததில் இருந்து, 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இது காகித தொழிலை கடுமையாக பாதிக்கும். காகித பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. மறுசுழற்சி செய்யலாம். எனவே ஜி.எஸ்.டி. உயர்வை திரும்ப பெற வேண்டும்.
பேக்கிங் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது, மாற்று ஆதாரங்கள் இல்லாமல் தடை செய்யப்பட்டுள்ளது. பேக்கிங்குக்கான மாற்று பொருள் போர்க்கால அடிப்படையில் ஏற்பாடு செய்ய வேண்டும். ஈரோடு மாவட்டத்தை கோவை மற்றும் சேலத்தில் முன்மொழியப்பட்ட தொழில் வழிப்பாதை திட்டத்துடன் இணைக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் பிரச்சினையை காரணம் காட்டி அதிகாரிகளால் பல தொழிற்சாலைகள் நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு அந்த நடவடிக்கையை குறைக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்துக்கான ஏற்றுமதி முனையம் நிறுவப்பட வேண்டும். பெருந்துறை சிப்காட்டில் ரயில் சரக்கு முனையும் நிறுவ வேண்டும். தொழில் துறையில் பணியாளர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்பத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் செயலாளர் ராம்பிரகாஷ், துணைத்தலைவர்கள் ஸ்ரீதர், கந்தசாமி, பொருளாளர் பழனிவேல், இணைச்செயலாளர் சரவணபாபு உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu