பரோட்டா போடும் அமைச்சர், டீ போடும் முன்னாள் அமைச்சர்: ஈரோடு கிழக்குல தான்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பொதுமக்களுக்கு உதவும் இந்நாள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள்
சட்டமன்றத் தேர்தலோ நாடாளுமன்றத் தேர்தலோ இடைத்தேர்தலோ எந்த தேர்தல் என்றாலும் பரப்பிரையில் ஈடுபடும் தலைவர்கள் பல சுவாரசியங்களை ஏற்படுத்துவார்கள்.
சாலையோர கடைகளில் சாப்பிடுவது, டீ குடிப்பது என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் டீக்கடையில் டீ போட்டுக் கொடுப்பது, வடை சுட்டு கொடுப்பது (வாய்ல இல்லை, உண்மையாகவே), தோசை ஊற்றுவது, பரோட்டா போடுவது, சலவை கடையில் சென்று அயர்ன் செய்வது, பெண்கள் துணி துவைக்கும் இடத்தில் சென்று துணி துவைத்து கொடுப்பது, பாத்திரம் கழுவும் இடத்தில் சென்று பாத்திரம் கழுவி கொடுப்பது, பெண்கள் தண்ணீர் பிடிக்கும் இடத்தில் சென்று தண்ணீர் தூக்கி கொடுப்பது என்று படு சுவாரசியத்தை ஏற்படுத்தி அது குறித்த வீடியோக்களையும் வலைத்தளங்களில் பதிவிட்டு வைரல் ஆக்கி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் பரோட்டா போட்டு, டீ போட்டு, அயர்ன் செய்து கொடுத்து அசத்தி வருகிறார்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர் தென்னரசு களமிறங்கியுள்ளார். அவருக்கு ஆதரவாக அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் பலரும் தீவிர பரப்புரை செய்து வருகின்றனர். அதேபோல் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் களம் இறங்கி இருக்கிறார். அவருக்கு ஆதரவாக திமுக அமைச்சர்களும் கூட்டணி கட்சி தலைவர்களும் பரப்புரை செய்து வருகின்றனர்.
வரும் 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஈரோடு முனிசிபல் காலனி பகுதியில் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் . அவர் பரப்புரையின்போது அப்பகுதியில் இருந்த உணவகம் ஒன்றுக்கு சென்று புரோட்டா போட்டு கொடுத்து இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்களிக்கும் படி கேட்டுக் கொண்டார் .அந்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. .
மற்றொரு அமைச்சர் தங்கம் தென்னரசு இருசக்கர வாகனத்தில் தொண்டர்களுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இது குறித்த வீடியோவும் வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஒரு டீக்கடைக்கு சென்று டீ போட்டுக் கொடுத்து தென்னரசு வாக்கு சேகரித்தார். அது மட்டுமல்லாமல் சலவை கடையில் சென்று துணிகளை அயர்ன் செய்து கொடுத்தும் அவர் வாக்கு சேகரித்தார். இந்த வீடியோக்களும் வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இதெல்லாம் தேர்தலின் ஜெயிக்கும்வரை மட்டும் தான். ஜெயித்த பின்னர்? அது மக்களுக்கே தெரியும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu