நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்களே நேரடியாக வாக்களிக்க வேண்டும்: இரா.முத்தரசன்
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரா.முத்தரசன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு கூட்டம் ஈரோட்டில் இரண்டு நாள்கள் நடைபெற்றது. நிறைவு நாளான இன்று கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழகத்தில் 9 மாவட்ட மற்றும் பிற மாவட்டங்களில் காலியாக இருந்த ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியை தேடித்தந்த வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்படுவோம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றி உள்ளார். இதற்கான ஜனநாயக அங்கீகாரம் தான் உள்ளாட்சி தேர்தல் வெற்றி என்பது.
தமிழகத்தில் நீண்டகாலமாக நடத்தப்படாமல் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் இறுதிக்குள் நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தலைவர்களை மக்களே நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரும் வகையில், சட்டப்பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்ற வேண்டும்.
மத்திய அரசு மக்கள் நலனில் சிறிதும் கவலை இல்லாமல் பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் உயர்த்தி வருவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைத்துள்ளது. ஆனால் ஒன்றிய அரசு 3 பைசா கூட குறைக்கவில்லை. மாறாக தினமும் விலையை உயர்த்தி மக்களை துன்பப்படுத்தி வருகின்றது.
இதனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக வரும் 30 ம் தேதி ஒன்றிய, நகர, மாவட்ட தலைநகரங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சைக்கிள் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக 17 ஏழை மாணவ, மாணவியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் மூலம் குடியரசு தலைவருக்கு அனுப்பபட்டது. ஆனால் பல மாதங்கள் ஆகியும் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது தொடர்பாக தமிழக முதல்வர் ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார். நீட் விவகாரத்தில் மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு உரிய மதிப்பு அளிக்காமல் இருப்பது கண்டிக்கதக்கது. நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே மத்திய அரசு மாநிலங்களுக்கு தேவையான நிலக்கரியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் நிலவி வரும் ஆணவ படுகொலைகளை தடுக்க தனிசட்டம் நிறைவேற்ற வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரிய மூலம் நடத்தப்படும் தகுதித்தேர்வை எழுதுவதற்கான வயது வரம்பை நீக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் இருந்த போதே முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் சோதனை நடத்துகின்றனர். அதிமுக ஆட்சியில் பல அமைச்சர்கள் தவறு செய்துள்ளனர். தவறு செய்துள்ள முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை என்பது சட்டரீதியான நடவடிக்கையாகும் என பேட்டி அளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu