சாயக்கழிவு பிரச்சினையிலிருந்து காப்பாற்றப்படுமா காவிரி ஆறு?
காவிரி ஆற்றில் அலசப்படும் சாயம் கலந்த துணிகள்
ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பொதுமக்களின் குடிநீராகவும், விவசாயிகளின் பாசன நீராகவும் காவிரி பயன்படுகிறது.
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில், தமிழக அரசின் அனுமதியின்றி செயல்படும் சாயப்பட்டறைகளிலிருந்து சட்டவிரோதமாக இரவு நேரங்களில் தினந்தோறும் 10க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில், 100 முதல் 200 டனுக்கு மேலாக சாயமேற்றப்பட்ட துணிகளை அலசி வருவது சாயப்பட்டறை உரிமையாளர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்,
கடுமையாக சாயமேற்றப்பட்ட துணிகளை காவிரி ஆற்று நீரில் பல மணி நேரம் ஊற வைத்து, விடிய, விடிய அலசி வருவதால் சாய துணிகளில் உள்ள, பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் கடுமையான சாயமானது ஆற்று நீருடன் கலந்து விடுகிறது,
நேரடியாக சாயம் கலந்த நீரை பொதுமக்களுக்கு குடிநீராக விநியோகிப்பதனால், குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைந்து, பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட்டும், முதியோருக்கு கேன்சர் போன்ற பல்வேறு நோய்களால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது,
சாய கழிவுநீர் நேரடியாக காவிரியாற்றில் கலப்பதால் விவசாயிகளின் வாழ்வாதாரமான விளைச்சல் கடுமையாக பாதிக்கப்படுகிறது எனவும் விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்த வண்ணம் இருந்து வருகின்றனர்,
இந்த புகார்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்காமல், ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சாய மற்றும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாக சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு கலெக்டர் கிருஷ்ணணுண்ணிக்கு, விவசாயி கவின் என்பவர், கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சாயக் துணிகள் பல நூறு டன் கணக்கில் அலசப்பட்டு வருவதாக தொலைபேசி வாயிலாக புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதன் பேரில், சம்பவ இடத்திற்கு 3 மணி நேரம் கழித்து மிகவும் மெத்தனமாக வந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்,
அப்போது காவிரி ஆற்றில் டன் கணக்கில் தேங்கி நின்ற சாயக்கழிவு துணிகளுக்கு அருகில் இருந்த தண்ணீரை சோதனைக்காக எடுத்துச் சென்றனர்,
மேலும் சோதனையின்போது அலசப்பட்டு வந்த சுமார் 100 டன் துணிகளையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu