பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர் ஜெயலலிதா: ஓபிஎஸ்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்.
ஈரோட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: அதிமுக தொடங்கிய காலத்திலிருந்தே ஈரோடு அதிமுகவின் எஃகு கோட்டை. அதிமுகவை அழிக்க திமுக செய்த சதி வேலைகளை முறியடித்தவர் ஜெயல்லிதா. அதிமுக அரசு 33 ஆயிரம் கோடி ரூபாயை கல்விக்காக ஒதுக்கியதன் மூலம் 52 % மாணவர்கள் உயர்கல்விக்கு செல்கின்றனர். கொடுத்த வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்றியது. திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை நம்ப வைத்து ஆட்சிக்கு வந்துள்ளது.
திமுக அரசு எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தே நீட் ரத்து குறித்த கையெழுத்து தான் என்ற ஸ்டாலின், திமுக ஆட்சி 10 மாதங்கள் ஆகியும் நீட்டை ரத்து செய்யவில்லை. பார்க்க வேண்டியவர்களை பார்த்து, விளக்க வேண்டியதை விளக்கி, நீட்டை ரத்து செய்ய வேண்டும் என்பதே சட்டபூர்வ நடவடிக்கை என்பது அதிமுகவின் நிலைப்பாடு. நிதியுதவி இல்லாமல் கொடுத்த பொங்கல் பொருட்கள் அனைத்தும் தரமற்ற பொருள்கள். பொருட்களை வடநாட்டில் கொள்முதல் செய்து, புரட்சித்தலைவர் சொன்னது போல எப்பவும் போல திமுக விஞ்ஞான வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.
மக்களுக்கு பயன் பெறும் திட்டங்களை துரிதமாக செயல்படுத்தும் அரசு தான் நல்லரசு என்றும் , உள்ளாட்சியில் பெண்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும் என்பதற்காகவே 50% இட ஒதுக்கீடு கொண்டுவந்தவர் ஜெயலலிதா , 10 மாத திமுக ஆட்சியின் அவலநிலைகளை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும் என்று பேசினார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் கருப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu