வரதட்சனை கேட்டு கணவன் வீட்டார் கொடுமை: இளம்பெண் கலெக்டர் அலுவலகத்தில் மனு
ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த உமா மகேஸ்வரி.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது மனுக்களை வழங்கினர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை புதிய பஸ் நிலையம் பகுதியை சேர்ந்த உமா மகேஸ்வரி(வயது 28) என்ற பெண் தனது குடும்பத்தினருடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
அந்த மனுவில், எனக்கும் கோபி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 28.5.2021 திருமணம் நடந்தது. திருமணத்தின் போது கணவர் வீட்டார் வரதட்சணை வாங்கவில்லை. எனது கணவர் மும்பையில் மத்திய அரசு ஊழியராக வேலை பார்த்து வருகிறார். திருமணம் முடிந்து 20 நாட்கள் ஒன்றாக வாழ்ந்தோம்.
இந்நிலையில் எனது கணவர் மற்றும் அவரது வீட்டார் என்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்த தொடங்கினர். 40 பவுன் நகை, 2 லட்சம் ரொக்கப் பணம் வேண்டும் என என்னை எனது கணவர் மற்றும் அவரது வீட்டார் அடித்து வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டனர்.
நான் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர். எனது தந்தை கூலி தொழிலாளி. இது எல்லாம் தெரிந்துதான் எனது கணவர் விட்டார் திருமணம் செய்து கொண்டனர். இது தொடர்பாக மகளிர் காவல் நிலையம், எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. என்னையும் என் கணவரையும் ஒன்றாக சேர்த்து வைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் கணவர் மற்றும் அவர் குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu