கோட்டை பெருமாள் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி: முன்னேற்பாடுகள் தீவிரம்
ஈரோடு கோட்டை பெருமாள் கோவில்.
ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 4ம் தேதி பகல் பத்து உற்சவத்தின் தொடங்கியது. இதைத் தொடர்ந்து இன்று மாலை வரை பகல் பத்து உற்சவம் நடைபெறுகிறது. இன்று மாலை 5 மணிக்கு கஸ்தூரி அரங்கநாதர் சுவாமி மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
இதைத் தொடர்ந்து இன்று இரவு 9 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நாளை அதிகாலை பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசலுக்கு அதிகாலை 3 மணிக்கு திருப்பல்லாண்டு, திருப்பள்ளி எழுச்சி, திருமஞ்சனம் பூஜை, தீபாராதனை காண்பிக்கப்பட்டு அதிகாலை 4.45 மணியளவில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கோவில் பணியாளர்கள் மற்றும் வட்டாட்சியர்கள், சாமியார்கள் கொண்டு நடத்தப்படும். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி முடிந்ததும் நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் பெருமாள் கோவில் சார்பாக செய்யப்பட்டுள்ளது. கூட்டம் அதிக அளவு வரும் என்பதால் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மூங்கிலால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு அதன் வழியாக பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
நாளை முதல் 23ம் தேதி வரை ராபத்து உற்சவம் மற்றும் முத்தங்கி சேவை நடைபெறுகிறது. வரும் 23 ஆம் தேதி இரவு 7 மணிக்கு நம்மாழ்வார் மோட்சம், திருவாசல் சாற்று முறை நடைபெறுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அரசின் நிலை என வழிபாட்டு நெறிமுறைகள் முழுமையாக பின்பற்றி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணராஜ் தெரிவித்துள்ளார்.100-க்கும் மேற்பட்டபோலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu