தரமற்ற, காலாவதி உணவுப்பொருட்கள்: பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டுகோள்

தரமில்லாத உணவு, காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்வது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என, உணவு பாதுகாப்பு துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஈரோடு மாநகரில் உள்ள சாலையோர பானிபூரி கடைகள், ஓட்டல் கடைகளில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தங்க விக்னேஷ் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலை டெலிபோன் பவன், காளைமாட்டு சிலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர பானிபூரி, ஓட்டல் கடைகளில் ஆய்வு நடத்தினர்.

அதில், தடை செய்யப்பட்ட உணவு பொருட்களை பயன்படுத்துகின்றனரா? அல்லது காலாவதியான உணவு பொருட்களை பயன்படுத்துகின்றனரா? என சோதனை செய்தனர். சோதனை மேற்கொண்ட அனைத்து கடைகளிலும் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள் கடை உரிமையாளர்களிடம் உரிமம் பெறாமல் விற்பனை செய்வது சட்டப்படி குற்றம், உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற பின்னரே உணவு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என எச்சரித்து அறிவுரைகள் கூறினர். தரமில்லாத உணவு, காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தால், பொதுமக்கள் 94440-42322 என்ற தொலைபேசி எண்ணில் புகார் அளிக்க அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!