சதமடிக்கும் வெயில்...! அவதிப்படும் ஈரோடு மக்கள்...!
ஈரோடு பகுதியில் அனல் காற்றுடன் வாட்டி வதைக்கும் வெயிலால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
குளிர்காலம் முடிந்து கோடைக் காலம் வர இம்முறை கொஞ்சம் நாட்கள் கூடுதலாகவே எடுத்துக் கொண்டது. இடைப்பட்ட காலத்தில் காலையில் குளிரும் மதியம் வெயிலும் கொளுத்தியது. மார்ச் மாதம் வழக்கமாக வெயில் கொளுத்தி எடுக்கும் நிலையில் இருந்தாலும் இம்முறை வழக்கத்தை விட அதிக தாக்கம் இருப்பதாக மக்கள் உணர்கின்றனர்.
மே மாதம் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்தால் அவ்வளவுதான் என மக்கள் கதிகலங்கி நிற்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. பலரும் இப்போவே இப்படி கொளுத்திக் கொண்டு இருக்கிறதே மே மாதம் வந்தா நாமெல்லாம் என்ன செய்வது என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
புழுக்கம் ஒருபக்கம் இருந்தாலும், இருசக்கர வாகன ஓட்டிகள் வெய்யிலில் பயணிக்கும்போது சற்று கூடுதலாகவே எரிச்சலடைந்துவிடுகிறார்கள். வெய்யிலும், வாகன நெருக்கமும் இரைச்சலும் அவர்களை டென்சன் ஆக்கிவிடுகிறது. முக்கியமாக ஈரோடு மாநகரில் வழக்கத்தைக் காட்டிலும் கூடுதல் வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது.
சேலம், ஈரோடு, பாளையங்கோட்டை, வேலூர் உள்ளிட்ட நகரங்களில்தான் அதிக அளவில் வெயில் இருக்கும். இப்போதே ஈரோடு பகுதியில் 101 டிகிரி அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது. கண்களே பொசுங்கிவிடும் அளவுக்கு சூரிய கதிர்கள் மனித உடலை ஊடுருவிக் கொண்டிருக்கின்றன என மக்கள் பேசி வருகின்றனர்.
ஆலைகளில் வேலை செய்யும் மக்களின் துயரம் சொல்லில் அடங்காதவை. பாதுகாப்புக்காக அவர்கள் அணியும் உடைகள் ஏற்கனவே சூட்டைக் கிளப்பும், இப்படி வெயில் கொளுத்தினாலும் அவர்கள் தங்களது வேலையை சரியாக செய்து வருவதே பெரிய விசயமாக பார்க்கப்படுகிறது.
காலை 7 மணிக்கே தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 7 மணி ஆனாலும் விடுவதில்லை. சரி வெயில் குறைந்துவிட்டாலும் அனல் காற்றும், புழுக்கமும் இரவில் பாடாய் படுத்திவிடுகிறது. ஆற்றங்கரைகளில் இருப்பவர்களுக்கு மாலை நேரங்களிலாவது ஆறுதல் கிடைக்கிறது.
மதிய நேரங்களில் குறிப்பாக 11 மணிக்கு பிறகு 3 மணிக்குள் பெரியவர்கள், குழந்தைகள், உடல் நலம் குன்றியவர்கள் வெளியில் செல்லாமல் தவிர்ப்பது சிறந்தது.
இளநீர், நுங்கு, பதனீர், எலுமிச்சை சாறு, மோர், கூழ் உள்ளிட்டவை அடிக்கடி பருகி வர வெய்யிலிலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். மிகவும் மலிவான விலையில் கிடைப்பது தண்ணீர் மட்டும்தான் என்றால் அதையாவது ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு கிளாஸ் அளவு எடுத்து குடிப்பது நல்லது.
முடிந்தவரை நீரேற்றம் அடைந்த நிலையில் உடலை வைத்திருங்கள். வெள்ளரிக்காய், தர்பூசணி, கரும்புச்சாறு உள்ளிட்டவற்றை அடிக்கடி பருகி வாருங்கள்.
வார இறுதி விடுமுறைகளின் போது பலரும் நீர் நிலைகளை நோக்கி படையெடுப்பதையும் காண முடிகிறது. கோபி கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகள் நிரம்பி வழிகின்றனர். மேலும் கீழ் பவானி, காளிங்கராயன் வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu