இபிஎஸ் அணி வேட்புமனு தாக்கல் தேதி மாற்றம்: சமாதான பேச்சு வார்த்தையில் பாஜக?
சமாதான பேச்சு வார்த்தையில் பாஜக
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் நிலையில் அக்கட்சியின் வேட்பாளராக, மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவேராவின் தந்தையும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார் . அதே சமயம் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி அணி ஓ .பன்னீர்செல்வம் அணி என இரண்டு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக ,தேமுதிக ,அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை போட்டியிடுகின்றன. அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இரண்டு அணிகளாக பிரிந்து தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஓபிஎஸ் அணியில் செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்
அத்துடன் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்களுடன் இரு அணியினரும் தனித்தனியாக சந்தித்து ஆதரவு கோரியுள்ளனர். இந்த சூழலில் பாஜக தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருந்து வந்தது. அதிமுகவில் இரு அணிகள் சார்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் சமாதான பேச்சுவார்த்தையில் பாஜக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இரண்டு அணிகளாக பிரிந்து அதிமுக போட்டியிடுவதால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பும் கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த சூழலில் பாஜக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன் கட்சி சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த கூட்டத்திலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக என்ன முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்த சூழலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவசர பயணமாக நேற்று டெல்லி சென்று வந்த நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நிலையில், அடுத்ததாக ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்கவுள்ளார் .
இதன் மூலம் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரையும் இணைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் இன்று வேட்புமுனு தாக்கல் செய்ய இருந்த நிலையில் 7ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நிலையில் வேட்பு மனு தாக்கல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் சென்னை தனியார் நட்சத்திர விடுதியில் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவியுடன் அண்ணாமலை திடீர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்புக்கு பின் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu