ஈரோட்டில் திமுக., அதிமுகவினர் போட்டி போட்டு வேட்புமனு தாக்கல்

ஈரோட்டில் திமுக., அதிமுகவினர் போட்டி போட்டு வேட்புமனு தாக்கல்
X

பைல் படம்.

திமுக, அதிமுக வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டி போட்டு கொண்டு வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளில் கவுன்சிலர்களுக்கான தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 29-ந் தேதி தொடங்கியது. ஈரோடு மாநகர் பகுதியில் 4 மண்டல அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகம், வீரப்பன்சத்திரம் அலுவலகம் என 6 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் 4 நகராட்சியில் அந்தந்த அலுவலகங்களில் மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 42 பேரூராட்சி அலுவலகங்களில் மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டம் முழுவதும் 173 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

நேற்று ஈரோடு மாநகராட்சியில்17 பேர், நான்கு நகராட்சியில் 42 பேர், 42 பேரூராட்சியில் 215 பேர் என 274 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். மாவட்ட அளவில் இதுவரை 447 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இதுவரை பெரிய கட்சிகளான அதிமுக, திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. மாநகராட்சியை பொறுத்தவரை 60 வார்டுகளில் அதிமுக 57 வார்டுகளில் போட்டியிடுகிறது.

அதன் கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் 3 வார்டுகளில் போட்டியிடுகிறது. திமுகவைப் பொறுத்தவரை நீண்ட இழுபறிக்குப் பிறகு நேற்று காலை மாநகராட்சி போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 60 வார்டுகளில் திமுக 45 வார்டுகளில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 15 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டி போட்டு கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்திற்கு சென்று வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இதனால் இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட இடங்களில் பரபரப்பாக காணப்பட்டது. போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று கடைசி நாள் என்பதால் இன்னும் பரபரப்பாக காட்சி அளிக்கும். இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதேபோல் அந்தந்த நகராட்சி அலுவலகங்கள், அந்தந்த பேரூராட்சி அலுவலகங்களில் மேலும் நேற்று ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்