குண்டும் குழியுமான ரோட்டை சீரமைக்க கோரி மண்டல அலுவலகத்தில் குடியேறிய மக்கள்

குண்டும் குழியுமான ரோட்டை சீரமைக்க கோரி  மண்டல அலுவலகத்தில் குடியேறிய மக்கள்
X

மண்டல அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்திய பொதுமக்கள்.

குண்டும் குழியுமான ரோட்டை சீரமைக்க கோரி மண்டல அலுவலகத்தில் குடியேறிய பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாநகராட்சி 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட மூலப்பாளையம், ஜீவானந்தம் வீதி, ஸ்டாலின் வீதி, ராஜீவ் வீதி, சீனிவாசராவ் வீதி உட்பட்ட பகுதியில் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்ட பணிக்காகவும், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட பணிக்காகவும் ரோடுகள் பறிக்கப்பட்டன. அதன் பின்னர் குழாய்கள் பதிக்கப்பட்டு குழிகள் மூடப்பட்டன. அவை சரிவர மூடப்படாததால் ரோடு குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மேலும் ரோடுகள் புதர் மண்டியும் காணப்படுகிறது.

இதன் காரணமாக பாம்பு தேள் உட்பட்ட விஷ பூச்சிகள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இந்த ரோட்டை கடந்து செல்ல அச்சப்படுகின்றனர். ரோட்டை சீரமைக்க கோரி பலமுறை மாநகராட்சி அலுவலகத்தில் மண்டல அலுவலகத்திலும் அதிகாரியை சந்தித்து மனு கொடுத்தனர். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மண்டல அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி இன்று 70-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மண்டல அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் சூரம்பட்டி இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையிலான போலீசார் மற்றும் 4-ம் மண்டல உதவி ஆணையாளர் வடிவுக்கரசி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் பல மாதங்களாக ரோடுகள் சிரமப்படாமல் உள்ளது. இதன் காரணமாக மழை காலங்களில் ரோட்டில் தண்ணீர் தேங்கி நிற்பதால் நடந்து செல்ல கஷ்டமாக உள்ளது. மேலும் வாகனங்களில் செல்லும்போது விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. பாம்பு தேள் போன்ற விஷ பூச்சிகள் இருப்பதால் சிறுவர் சிறுமிகள் இந்த பகுதியில் நடமாட அச்சப்படுகின்றனர். எனவே ரோட்டை உறைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அதற்கு அதிகாரிகள் உங்கள் கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரோட்டை சீரமைப்பது குறித்து எழுத்துப்பூர்வமாக எழுதி தந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!